மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட பிரபல கோடீஸ்வரர் மகன் என்னை அணுகினார்... இலங்கை வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு!
இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விளையாட்டு அமைச்சின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது சீசன் 2021 டிசம்பரில் நடந்தது, இத்தொடரில் ஐந்து அணிகள் போட்டியிட்டது. இதில் பல வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
LPL-ல் விளையாடிய இலங்கை அணியின் முன்னணி வீரர் ஒருவரை, சிலர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட அணுகியதையடுத்து, அவர் தங்களிடம் புகார் அளித்துள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு தலைவர் ஜகத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஒரு கோடீஸ்வர வியாபாரியின் மகன் மற்றும் அதே நபரின் நண்பர் ஒருவர், LPL தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட தன்னை அணுகியதாக முன்னணி வீரர் எங்களிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளோம் என பொன்சேகா தெரிவித்துள்ளார்.
2019ல் இயற்றப்பட்ட விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் சட்டம், விளையாட்டில் மேட்ச் பிக்சிங், ஊழல், சட்டவிரோதமான சூழ்ச்சி மற்றும் சட்டவிரோத சூதாட்டம் ஆகியவற்றைத் தடுப்பதற்கும், குற்றங்களை விசாரிப்பதற்காக சிறப்புப் புலனாய்வுப் பிரிவை நியமிப்பதற்கும் வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.