மழையால் ரத்தான பஞ்சாப் - கொல்கத்தா ஆட்டம்... பாவம் மும்பை அணி
கொல்கத்தா - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது
சிறப்பாக ஆடிய பிரப்சிம்ரன் சிங்
44வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து பஞ்சாப் அணி களமிறங்கியது. இதற்கு முன் இரு அணிகளும் விளையாடிய போட்டியில் கொல்கத்தா அணியை 95 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் செய்து பஞ்சாப் அணி மரண மாஸ் வெற்றியை பெற்றது.
இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் துடுப்பாட்டம் தெரிவு செய்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை குவித்தது.
சிறப்பாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் 49 பந்துகளில் 83 ஓட்டங்களையும், பிரியன்ஷ் 35 பந்துகளில் 69 ஓட்டங்களையும் விளாசினர். கடைசி நேரத்தில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 16 பந்துகளில் 25 ஓட்டங்களை விளாசினார்.
இதன்பின் 202 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியது. முதல் ஓவரில் 7 ஓட்டங்களை சேர்த்த நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை நின்று ஆட்டம் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, பலமாக காற்று வீசத் தொடங்கியது.
மழையால் கைவிடப்படுவதாக
இதனால் மைதான ஊழியர்கள் உடனடியாக ஒட்டுமொத்த மைதானத்தையும் தார் பாய் விரித்து பாதுகாத்தனர். 10.30 மணி வரை மழை பெய்தாலும், ஓவர்கள் குறைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 10.30 மணிக்கு மேலாகவும் மழை அதிகமாக பெய்ய தொடங்கியது.
இதனால் கொல்கத்தா - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது.
புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 11 புள்ளிகள் பெற்று 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் மும்பை அணி 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் கொல்கத்தா அணி 9 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 7 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |