200 பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனையில் மரணம்: பிரித்தானியாவை மொத்தமாக உலுக்கிய சம்பவம்
பிரித்தானியாவில் NHS மகப்பேறு மருத்துவமனையில் செவிலியர்களின் கவனக்குறைவு காரணமாக 200 குழந்தைகள் வரையில் மரணமடைந்துள்ளதாக விசாரணை அறிக்கை ஒன்றில் அம்பலமாகியுள்ளது.
NHS வரலாற்றில் குறித்த சம்பவமானது மிகப்பெரிய மகப்பேறு முறைகேடாக கருதப்படுகிறது. குறித்த விசாரணை அறிக்கையில், குறைந்தது 201 பச்சிளம் குழந்தைகள் மற்றும் 9 தாய்மர்கள் செவிலியர்களின் கவனக்குறைவால் மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, குறைந்தது 94 குழந்தைகள் தவிர்க்கக்கூடிய மூளைக் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், குறைந்தது 304 குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்புடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல தாய்மார்களுக்கு அறுவை சிகிச்சை மறுக்கப்பட்டு, மகப்பேறு வலியால் துடிக்கவிட்டுள்ளனர் எனவும், இதனால் பல குழந்தைகள் மண்டை ஓடுகளில் காயம்பட்டும் எலும்புகள் உடைந்த நிலையிலும், எஞ்சியவர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டனர் எனவும் வாழ்க்கையை மாற்றும் மூளை காயங்களுக்கும் இலக்காகினர் என அந்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய விவகாரத்திற்கு முதன்மை காரணமாக கூறப்படுவது, ஊழியர்களின் பற்றாக்குறை, உரிய பயிற்சி எடுத்துக்கொள்ளாமை உள்ளிட்டவைகளை குறிப்பிடுகின்றனர்.
இச்சம்பவங்கள் அனைத்தும் NHS அமைப்பின் கீழில் செயல்படும் Shrewsbury மற்றும் Telford மருத்துவமனைகளில் நடந்துள்ளது. 2017ல் இவ்வாறான சூழலில் 23 குழந்தைகள் மரணமடைந்ததை அடுத்து அப்போதைய சுகாதார செயலர் ஜெர்மி ஹன்ட் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து 1973 முதல் 2020 வரையான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,486 குடும்பங்கள் முன்வந்து தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.
இந்த விசாரணையின் அறிக்கையே தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.