அச்சுறுத்தும் இன்னொரு கொரோனா மாறுபாடு... ஆபத்து அதிகம்: எச்சரிக்கும் நிபுணர்கள்
பிரித்தானியாவில் மெதுவாக பரவத் தொடங்கியிருக்கும் லாம்ப்டா கொரோனா மாறுபாடானது ஆபத்து மிகுந்தது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெரு நாட்டில் முதல்முறையாக அடையாளம் காணப்பட்ட இந்த லாம்ப்டா மாறுபாடானது, அங்கு தற்போதுள்ள புதிய நோயாளிகளில் 80% பேர்களில் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை 6 பேர்களில் மட்டும் லாம்ப்டா மாறுபாடானது அடையாளம் காணப்பட்டுள்ளது. லாம்ப்டா மாறுபாடானது எஞ்சிய மாறுபாடுகளைவிட வீரியம் அதிகம் எனவும், மிக எளிதில் பரவக்கூடியது எனவும் நிபுணர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் உயிர்ப்பலியை அதிகரிக்குமா என்பது தொடர்பில் இதுவரையான தரவுகளின் அடிப்படையில் கணிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
லாம்ப்டா மாறுபாடானது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி என கூறியுள்ள நிபுணர்கள், ஆனால் அது தொடர்பில் ஆய்வு முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், சிலி பல்கலைக்கழக நிபுணர்களும் பிரேசிலிய மற்றும் இங்கிலாந்து மாறுபாடுகளை விட லாம்ப்டா மாறுபாடு அச்சுறுத்தல் மிகுந்தது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரித்தானியாவை பொறுத்தமட்டில் அடையாளம் காணப்பட்ட 6 பேர்களும் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்றே தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 26 நாடுகளில் லாம்ப்டா மாறுபாடானது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.