பிரான்சில் மே தினப்பேரணியில் கலவரம்... பொலிசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று நடந்த மே தினப்பேரணியில் கலவரம் வெடித்தது. பாலஸ்தீன ஆதரவு குழுக்களும், ஒலிம்பிக் எதிர்ப்பு குழுக்களும் கைகோர்த்துக்கொள்ள, பொலிசார் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தைக் கலைக்கவேண்டிய நிலைமை உருவானது.
பல பிரிவு எதிர்ப்பு குழுக்கள்
பேரணியில், பாலஸ்தீன ஆதரவு குழுக்களுடன், பல்வேறு கோரிக்கைகளுடன் மக்கள் பங்கேற்றதைக் காணமுடிந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, எல்லோரும் கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் தங்கள் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தில், நாங்கள் மட்டும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக வேலைக்கு வரவேண்டுமா என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பியவண்ணம் பேரணியில் கலந்துகொண்டனர்.
கோடை விடுமுறையின்போது நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக வேலை செய்ய இருக்கும் ஊழியர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படாவிட்டால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என ஏற்கனவே தொழிலாளர் யூனியன்கள் எச்சரித்துள்ளன.
இன்னொரு பக்கமோ, காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களைக் கண்டித்து, ஒரு கூட்டம் பதாகைகளுடன் பேரணியில் கலந்துகொண்டது.
வெடித்த மோதல்
Credit: Rex Features
ஒரு கட்டத்தில் கூட்டத்தை பொலிசார் கட்டுப்படுத்த முயல, இரு தரப்புக்கும் மோதல் உருவானது. பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், கார் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
Credit: Getty
கூட்டத்தைக் கலைக்க பொலிசார் கண்ணீர் புகை குண்டு வீசியுள்ளனர். கடைசியில் 29 பேர் கைது செய்யபட்டுள்ளதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Credit: Getty
இதற்கிடையில், ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கிவரும் நேரத்தில், இப்படி ஒலிம்பிக் எதிர்ப்பு உருவாகிவருவது பிரான்ஸ் அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளதை மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |