சிவன் கோவில் கருவறையில் மயில்சாமியின் திருவுருவப் படத்திற்கு வழிபாடு
கோயில் கருவறையில் மயில்சாமியின் புகைப்படத்தை வைத்து கோவில் நிர்வாகிகள் வழிபாடு செய்தனர்.
பிரபலங்களின் அஞ்சலி
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் மயில்சாமி கடந்த பிப்ரவரி 19ஆம் திகதி அன்று மாரடைப்பால் காலமானார். அவர் இழப்பிற்குத் தமிழ் திரைத்துறை நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உட்பட தமிழக மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
மிமிக்ரி நடிகராக மட்டுமில்லாது, குணச்சித்திர நடிப்பிலும் மக்களை தன் திறமையால் ஆச்சரியப்படுத்திய மயில்சாமி மரணத்திற்கு நடிகர் ரஜினி அவரது கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் எனக் கூறியிருந்தார்.
திருவுருவப் படத்திற்கு வழிபாடு
18 ஆம் தேதி இரவு கேளம்பாக்கத்தில் அருகே மேலக் கோட்டையூரில் உள்ள மேகநாதீஸ்வரர் கோயிலில் நடந்த சிவராத்திரி விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தார். அங்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து பஜனையில் கலந்து கொண்டார். பின்னர் அதிகாலையில் வீடு திரும்பிய அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில் மயில்சாமியின் திருவுருவப் படத்தை அவர் கடைசியாகப் பங்கேற்ற கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயிலின் கருவறையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.
மயில்சாமி அந்த கோயிலுக்குப் பல வருடங்களாக வருகை தந்து ஏராளமான நலத்திட்டப் பணிகளைச் செய்துள்ளதாகவும், அவரின் ஆன்மா சாந்தியடையவே அவரது புகைப்படத்தைக் கருவறையில் வைத்து வழிபட்டதாகவும் கோயில் அர்ச்சகர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.