முதல் சுற்று பேரழிவு... திரளாக வாக்களிக்க மக்களை வலியுறுத்திய கைலியன் எம்பாப்பே
பிரான்ஸ் தேர்தலின் முதல் சுற்றில், தீவிர வலதுசாரிகள் கூட்டணி ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில், அவர்களின் ஆட்சியை தடுக்கும் வகையில் மக்கள் திரளாக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கைலியன் எம்பாப்பே முன்வைத்துள்ளார்.
முதல் வலதுசாரிகளின் ஆட்சி
பிரான்ஸ் பொதுத்தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு எதிர்வரும் ஞாயிறன்று முன்னெடுக்கப்பட உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் National Rally கட்சி 33 சதவிகித வாக்குகளை கைப்பற்றியிருந்தது.
தற்போது இரண்டாம் சுற்றில் National Rally கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்றால், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிரான்ஸ் நாட்டில் அமையும் முதல் வலதுசாரிகளின் ஆட்சி இதுவாக இருக்கும்.
இந்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து National Rally கட்சி ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைவரான கைலியன் எம்பாப்பே தொடர்ந்து தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
சரியான கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்
தற்போது இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், தீவிர வலதுசாரிகளான, குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான கட்சியான National Rally-யிடம் இருந்து நாட்டை காப்பாற்ற மக்கள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மிக நெருக்கடியான சூழல் இதுவென குறிப்பிட்டுள்ள கைலியன் எம்பாப்பே, அந்த மக்களிடம் நமது நாட்டை கையளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளதுடன், மக்கள் திரளாக சரியான கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் ஜேர்மனியில் தமது அணியுடன் இருந்தாலும், தேர்தல் தொடர்பில் உன்னிப்பாக கவனித்து வருவதுடன், மக்களுக்கு கோரிக்கையும் முன்வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |