பும்ராவின் மிகப்பெரிய ரசிகன் நான்! அவுஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் கருத்து
பும்ரா இல்லையெனில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அவுஸ்திரேலியாவுக்கு சாதகமாக இருந்திருக்கும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார்.
பும்ராவை பாராட்டிய கிளென் மெக்ராத்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சினால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத், பும்ராவின் இந்த செயல்பாட்டை பாராட்டியுள்ளார்.
டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பு பேசிய மெக்ராத், "பும்ரா என்னைப் பொறுத்தவரை கிளாஸான வீரர். அவர் தனித்துவமானவர். சூழ்நிலையை தகவமைத்துக் கொள்ளும் வழியைக் கண்டுபிடித்துள்ளார்.
அத்துடன் பும்ராவின் புள்ளிவிவரங்கள் நம்பமுடியாதவை. நான் அவரின் மிகப்பெரிய ரசிகன். அவர், இளமையாக இருந்தபோது நான் அவரை சந்தித்தேன், விளையாட்டில் அவர் வளர்ந்து வந்துள்ளது நம்பமுடியாதது என தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் இந்திய அணியின் பெரிய பலமாக இருக்கிறார். அவர் இல்லாமல் இருந்திருந்தால் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் இன்னும் கொஞ்சம் ஒருதலைப்பட்சமாக இருந்திருக்கும். இது அவுஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமைந்திருக்கும்" எனவும் தெரிவித்துள்ளார்.
தொடரை சமன் செய்யுமா இந்தியா
இந்திய அணி தற்போது 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், நாளை சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முயற்சியில் உள்ளது.
இந்தப் போட்டியில் பும்ராவின் பங்களிப்பு மிகவும் முக்கியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |