பிரான்சில் விளையாட்டுப் போட்டியில் விஷம் வைக்கப்பட்ட மாமிச உணவு: மனதை கலங்க வைத்த ஒரு சம்பவம்
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டி ஒன்றில், தங்கள் உரிமையாளர்களுடன் கலந்துகொண்ட வளர்ப்பு நாய்களுக்கு விஷம் வைக்கப்பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமிச உணவில் விஷம்
Canicross என்பது நாடுகளுக்கிடையே நாய்களுடன் அவற்றின் உரிமையாளர்கள் ஓடும் ஒரு பந்தயமாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரான்சுக்கு தெற்காக அமைந்துள்ள Vauvert நகரில், நாய்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது, வழியில் கிடந்த மீட் பால்ஸ் என்னும் மாமிச உணவை நாய்கள் சாப்பிட்டுள்ளன. சாப்பிட்ட 15 நிமிடத்தில் மூன்று நாய்கள் உயிரிழந்துவிட்டன, நான்காவது நாய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அதற்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
மனதை கலங்கவைத்த சம்பவம்
இந்த விடயம் செல்லப்பிராணிகளை வளர்ப்போர் மற்றும் விலங்குகள் நலனில் அக்கறை காட்டுவோரை கலங்கச் செய்துள்ளது.
விடயம் என்னவென்றால், விஷம் கலந்த மாமிசத்தை சாப்பிட்ட நான்கு நாய்களும், அடுத்து ஜேர்மனியில் நடக்க இருக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்கான இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள இருந்த நாய்களாகும்.
இந்த சம்பவம் நடந்த உடனே, நகர மேயர் சம்பந்தப்பட்ட இடத்தில் நடக்க மக்களுக்குத் தடைவிதித்துள்ளார். இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
பிரான்சில், விலங்குகளைத் துன்புறுத்துவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30,000 யூரோக்கள் வரை அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Photograph: Veronika Dvorakova/Alamy