பிரித்தானியாவில் பெண் வேடமிட்டு பெண் மருத்துவர் வீட்டுக்கு சென்ற நபர்... பின்னர் நடந்த கோர சம்பவம்
பிரித்தானியாவில் வாழும் பெண் மருத்துவர் ஒருவரின் வீட்டுக் கதவை பெண் ஒருவர் தட்டினார்.
யார் என்று பார்ப்பதற்காக கதவைத் திறந்த Dr Rym Alaoui என்ற அந்த இளம் பெண் மருத்துவர் முகத்தில் சுரீர் என எரிச்சல் தாக்க, அலறி சத்தமிட்டிருக்கிறார் அவர். ஆம், கதவைத் தட்டிய அந்த ‘பெண்’, Dr Rym Alaoui முகத்தில் ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து தப்பி விட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவர, Dr Rym Alaouiஇன் நிலை கண்டு உடனடியாக ஆம்புலன்சை அழைத்துள்ளார்கள் அவர்கள்.
மருத்துவ உதவிக்குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, Brightonஇல் அவர் பணி செய்த மருத்துவமனையிலேயே அவரை அனுமதித்துள்ளார்கள். வாழ்வையே மாற்றும் அளவுக்கு அவரது முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் பின்னர் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், Dr Rym Alaoui முகத்தில் ஆசிட் வீசி விட்டு தப்பிய பெண்ணை பொலிசார் தேடத்துவங்கியுள்ளார்கள்.
தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான CCTV கமெராக்களை ஆராய்ந்த பொலிசாருக்கு ஒரு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. முதல் கமெராவில் சிக்கிய அந்த பெண் கடைசி கமெராவுக்கு வரும்போதுதான் அவர் பெண்ணே இல்லை என்ற அதிரவைக்கும் உண்மை தெரியவந்துள்ளது.
ஆம், ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு, Dr Rym Alaoui வீட்டுக்கு வந்து அவரது முகத்தில் ஆசிட் அடித்துவிட்டு சென்றிருக்கிறார்.
அவர் யார் என விசாரிக்கும்போது, Dr Rym Alaouiஉடன் பயிற்சி பெற்றவரும், அவருக்கு அறிமுகமான மருத்துவ மாணவருமான Milad Rouf (25)தான் அந்த நபர் என்பது தெரியவந்தது.
அதாவது, Milad Rouf, பெண் போல வேடமிட்டு, Dr Rym Alaoui மீது ஆசிட் வீசி விட்டு, போகும் வழியில் ஆங்காங்கிருந்த குப்பைத்தொட்டிகளில் தான் அணிந்திருந்த பெண் உடைகள், கூலிங் கிளாஸ் முதலானவற்றை கழற்றி வீசிவிட்டு ஓடியிருக்கிறார். பொலிசார் பல மணி நேரம் CCTV கமெராக்களை ஆராய்ந்து இந்த உண்மையைக் கண்டு பிடித்ததுடன், சசெக்சில் குப்பைத்தொட்டிகளிலிருந்து அந்த உடைகளை மீட்டுள்ளனர்.
Milad Roufஇன் வீட்டை சோதனையிட்டபோது, அவர் அந்த உடைகளை வாங்கியதற்கான ஆதாரங்களும் சிக்க, அவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது, தான் Dr Rym Alaoui முகத்தில் ஆசிட் ஊற்றியதை Milad Rouf ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அவர் எதற்காக அப்படி செய்தார் என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை.
காவலில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.