பிரித்தானியாவில் மலையேற்றத்துக்குச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த துயரம்
பிரித்தானியாவில் தன் குடும்பத்துடன் மலையேற்றத்துக்குச் சென்ற இளைஞர் ஒருவர் 500 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.
மலையேற்றத்துக்குச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த துயரம்
மேற்கு சசெக்சைச் சேர்ந்த ஜான் அரவிந்த் (20) என்னும் இளைஞரும், அவரது சகோதரியும், தந்தையும், வேல்ஸ் நாட்டின் உயரமான மலையான Snowdonia மலைத்தொடரில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

வானிலை மோசமடையவே, ஜானுடைய தந்தையும் சகோதரியும் தங்கள் பயணத்தைக் கைவிட முடிவு செய்ய, ஜான் மட்டும் மலையேற்றத்தைத் தொடர்ந்துள்ளார்.
ஆனால், சிறிது நேரத்தில் அவரிடமிருந்து அவசர உதவிக்குழுவினருக்கு அழைப்பு வந்துள்ளது.
இரண்டு முறை அவர் உதவி கோரி அழைக்க, பொலிசார் மீண்டும் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரிடமிருந்து பதிலில்லை.
அந்த மோசமான வானிலையிலும், உயிரைப் பணயம் வைத்து மீட்புக்குழுவினர் ஜானைத் தேடிப் புறப்பட்டுள்ளார்கள்.
35 மீட்புக்குழுவினர் 18 மணி நேரம் விடாமல் தேடிய நிலையில், கடலோர பாதுகாப்புப் படையின் ஹெலிகொப்டர் ஒன்றிலிருந்தவர்கள், ஓரிடத்தில் அவரது உயிரற்ற உடல் கிடப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த துயர சம்பவம் மே மாதம் 26ஆம் திகதி நிகழ்ந்த நிலையில், ஜானுடைய மரணம் தொடர்பில் நீதிமன்ற அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவந்தார்கள்.
தற்போது அவர்களுடைய விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. ஜானுக்கு பார்வைக் குறைபாடு இருந்துள்ளது.
மணிக்கு 78 மைல் வேகத்தில் அடித்த காற்றில் அவர் தனது மூக்குக்கண்ணாடியைத் தவறவிட்டிருக்கலாம் என்றும், அதனால் பதற்றமடைந்திருந்த அவர் பள்ளத்தில் கால் வைத்திருக்கலாம் என்றும் மூத்த விசாரணை அதிகாரியான கேட் ராபர்ட்சன் என்பவர் தெரிவித்துள்ளார்.
500 அடி பள்ளத்தில் தவறி விழுந்ததால், ஜானுடைய தலையில் அடிபட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கேட் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |