புலம்பெயர்தல் எதிர்ப்பு பிரேரணை: மற்றொரு பிரிவினரும் எதிர்ப்பு
சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்புகள் நடப்பது புதிதல்ல என்றாலும், ஒரு குறிப்பிட்ட வாக்கெடுப்பு, இதுவரை இல்லாத அளவில் நாட்டின் கவனத்தை ஈர்த்துவருவது அனைவரும் அறிந்ததே.
இதுவரை இல்லாத வகையில்...
ஆம், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னும் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்புதான் அதிக அளவில் கவனம் ஈர்த்துவருகிறது.

அதாவது, புலம்பெயர்தலை கடுமையாக எதிர்த்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, நாட்டில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை ஒரு அளவுக்கு மேல் அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காக, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளது.
அடுத்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 14ஆம் திகதி அந்த பிரேரணை வாக்கெடுப்புக்கு வர உள்ள நிலையில், எப்படியாவது அதை வெற்றிபெறச்செய்துவிடவேண்டும் என ஒரு தரப்பினர் துடிக்கிறார்கள்.
ஆனால், புலம்பெயர்ந்தோர் இல்லாவிட்டால், முக்கியப் பணிகளைச் செய்ய ஆட்கள் கிடைக்கமாட்டார்கள், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதை நன்கறிந்த ஒரு கூட்டமோ, அந்த பிரேரணை நிறைவேறாமல் தடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
மற்றொரு பிரிவினரும் எதிர்ப்பு
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது எனக் கோரும் அந்த பிரேரணைக்கு மற்றொரு பிரிவினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
ஆம், மருத்துவத் துறையினர் அந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
அந்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு வெற்றி பெறுமானால், அதனால் சுவிட்சர்லாந்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தட்டுப்பாடு மேலும் அதிகமாகும் என்கிறார்கள் மருத்துவத் துறையினர்.
சுவிஸ் மருத்துவர்களில் 40 சதவிகிதத்துக்கு அதிகமானவர்களும், செவிலியர்களில் கால்வாசிப்பேரும் வெளிநாடுகளில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
சுவிஸ் மக்கள்தொகையில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், முதியோர்களைக் கவனித்துக்கொள்ளும் பணி செய்வோருக்கு 2030வாக்கில் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக, இப்படிப்பட்ட சூழலில், வெளிநாட்டவர்களை சுவிட்சர்லாந்துக்கு வரவிடாமல் தடுக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள No to 10 Million Switzerland என்னும் பிரேரணை வெற்றிபெறுமானால், அதனால் மருத்துவத்துறையில் பணியாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்கிறார்கள் அத்துறையினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |