குழந்தையின் கண் அருகே காயம் - சிகிச்சைக்கு பதிலாக பசை மூலம் ஒட்டிய மருத்துவர்
குழந்தையின் காயத்திற்கு சிகிச்சை அளிக்காமல், பசையால் மருத்துவர் ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரூட்டின் ஜாக்ரிதி விரிவாக்கப் பகுதியில் உள்ள மேப்பிள்ஸ் ஹைட்ஸைச் சேர்ந்தவர் சர்தார் ஜஸ்விந்தர் சிங்.

இவரது 2 வயது மகன் மான்ராஜ் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் போது, மேஜையின் முனையில் முட்டி கண் அருகே காயம் ஏற்பட்டுள்ளது.
காயத்திற்கு பசை தடவிய மருத்துவர்
சிகிச்சைக்காக உடனடியாக இரவு 8:30 மணியளவில் அருகே உள்ள பாக்யஸ்ரீ மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்குள்ள மருத்துவர்கள், வெட்டு காயத்திற்கு மருந்து தடவி தையல் போடுவதற்கு பதிலாக, 5 ரூபாய் பெவிக்(fevikwik) பசையை காயம் பட்ட இடத்தில் தடவி உள்ளார்.
குழந்தை வலிப்பதாக கூறியதற்கு, சிறிது நேரத்தில் வலி குறைந்து விடும் என மருத்துவர் தெரிவித்துள்ளார். பசை இறுகியதால் குழந்தை இரவு முழுவதும் வலியால் துடித்துள்ளது.

மறுநாள் காலை விடிந்ததும், லோக்பிரியா மருத்துவமனைக்கு மான்ராஜை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு தையல் போடுவதற்கு, 3 மணி நேரத்திற்கு மேலாக செலவிட்டு, காயத்தில் இறுகியிருந்த காய்ந்த பசையை அகற்றியுள்ளனர்.
மேலும், கண்ணிற்குள் பசையின் ரசாயனம் சென்றிருந்தால் விபரீதம் ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மீரட் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் அசோக் கட்டாரியாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |