கருப்பு வெள்ளையில் இளவரசர் ஹரி வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம்: சில சுவாரஸ்ய தகவல்கள்...
பிரித்தானிய ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட இளவரசர் ஹரி, இரண்டாவது குழந்தைக்கு அப்பாவாகப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஹரியின் மடியில், மேடிட்ட வயிற்றுடன் மேகன் தலைவைத்து படுத்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, தங்கள் மகன் ஆர்ச்சி அண்ணனாகப்போவதாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்கள் தம்பதி.
வழக்கமாக ராஜ குடும்பத்தில் குழந்தை பிறந்த பிறகுதான் அது குறித்த அறிவிப்பு வெளியாகும், அதுவும் இதுபோல் போட்டோஷூட் எல்லாம் இருக்காது, பாரம்பரிய உடை அணிந்த ஒருவர் வந்து இளவரசர் அல்லது இளவரசி பிறந்திருப்பதாக அறிவிப்பார்.
பின்னர் அதுகுறித்த ஒரு அறிவிப்பு, பிரேம் செய்யப்பட்டு ஒரு அறிவிப்பு பலகையில் வைக்கப்படும்.
இப்போது ஹரி ராஜ குடும்ப பொறுப்பில் இல்லை என்பதால், அவர் போட்டோஷூட் எல்லாம் செய்து தனக்கு குழந்தை பிறக்க இருப்பதை தெரியப்படுத்திருக்கிறார்.
ஹரியும் மேகனும் ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேற இருப்பதை முறைப்படி மகாராணியாருக்கு அறிவிக்காமல், ஊடகங்களுக்கு நேரடியாக தகவல் தெரிவித்த ஒரு விடயம், மகாராணியாருக்கு மனவருத்தத்தையும், பிரித்தானிய மக்களுக்கு ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
ஆனால், இம்முறை அப்படி மகாராணியாருக்கு வருத்தம் எதையும் ஏற்படுத்திவிடாமல், முன்கூட்டியே அவர்களுக்கு தகவல் தெரிவித்த பின்னரே, ஹரி தந்தையாக இருக்கும் செய்தியை வெளியிட்டுள்ளார்.
மகாராணியாரும் பதிலுக்கு, ஹரி அப்பாவாகப்போகும் செய்தி அறிந்து தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், மகாராணியார், இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம் மற்றும் முழு ராஜ குடும்பமும் ஹரி குடும்பத்தாரை வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹரி மேகன் தம்பதியினரின் அறிவிப்பில் மற்றொரு முக்கியத்துவமும் உள்ளது. சரியாக 37 ஆண்டுகளுக்கு முன் இதேபோல் ஒரு காதலர் தினத்தன்றுதான் ஹரியின் தாயான இளவசரி டயானாவும் தான் கர்ப்பமுற்றிருப்பதாக தெரிவித்தார், அவரது கர்ப்பத்திலிருந்தது இளவரசர் ஹரி!
இன்னொரு முக்கிய விடயம், இளவரசர் ஹரி ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்தாலும், அவருக்கு பிறக்கவிருக்கும் குழந்தை, இளவரசர் ஆண்ட்ரூ, அவரது மகள்கள் ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ராஜ குடும்ப வரிசையில் எட்டாவது இடத்தைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!




