பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மீது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கடும் தாக்கு
பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன், பிரித்தானிய மகாராணியாரை அவமதித்தாகவும், இளவரசர் ஹரியை பயன்படுத்திக்கொண்டதாகவும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், ஹரி மேகனுடைய நடவடிக்கைகள், கடந்த சில வருடங்களாக மகாராணியாரை காயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
எனக்கு எப்போதுமே மேகனைப் பிடிக்காது என்று வெளிப்படையாக கூறிய ட்ரம்ப், மேகன் இளவரசர் ஹரியை மிக மோசமான வகையில் பயன்படுத்திக்கொண்டிருப்பதாகவும், அது புரியும்போது, ஹரி அதற்காக ஒருநாள் வருத்தப்படுவார் என்றும் கூறியுள்ளார்.
மேகன் ஹரியைப் பயன்படுத்திக்கொண்டார், கொள்கிறார், அது ஹரிக்கும் அவரது குடும்பத்துக்கும் இடையிலான உறவைக் கெடுத்துவிட்டது. அது மகாராணியார் வேதனைப்படுத்துகிறது என்றார் ட்ரம்ப்.
மேகனைக் குறித்து பேசும்போது, அவர் மகாராணியாரை மிகவும் அவமதிக்கிறார் என்று நான் நினைக்கிறேன், மகாராணியார் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சிறந்த நபர். மேகனோ ராஜ குடும்பத்தை, குறிப்பாக மகாராணியாரை மிகவும் அவமதிக்கிறார் என்றார் ட்ரம்ப்.
மேகன் தனது பட்டத்தைப் பயன்படுத்தி அமெரிக்க அரசியலில் தலையிட முயன்றது குறித்து கேட்கப்பட்டபோது, அது மிகவும் முறையற்ற செயல் என்று கூறிய ட்ரம்ப், அவர் முறையற்ற செயல்களை செய்ய முயல்கிறார் என நான் நினைக்கிறேன் என்றார்.
டரம்ப் மேகனை விமர்சிப்பது இது முதல் முறையல்ல. சென்ற ஆண்டும் மேகன் அமெரிக்க அரசியல் குறித்து விமர்சித்தபோது எனக்கு மேகனைப் பிடிக்காது என அவர் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.