இன்னும் முடிவெடுக்காத ஹரி- மேகன் தம்பதி: குழப்பத்தில் பிரித்தானிய ராஜ குடும்பம்
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க வேண்டுமா என்பது தொடர்பில் இளவரசர் ஹரி - மேகன் தம்பதி இன்னமும் முடிவெடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அச்சப்படும் ஹரி- மேகன் தம்பதி
மறைந்த ராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி, அதன் பின்னர் ராணியாரின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் எதிர்கொள்ள நேர்ந்த கடினமான சூழலை தற்போதும் எதிர்கொள்ள நேரலாம் என ஹரி- மேகன் தம்பதி அஞ்சுவதாக கூறப்படுகிறது.
@getty
மேலும், முடிசூட்டு விழாவிற்கு புறப்படும் முன்னர் தந்தை சார்லஸ் மற்றும் சகோதரர் வில்லியத்திடம் மனம் விட்டு பேச வேண்டும் என ஹரி ஆசைப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள தமது நினைவுக்குறிப்புகள் நூல் வெளியான பின்னர் ஹரி பிரித்தானிய ராஜ குடும்பத்து உறுப்பினர்களை தொடர்புகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
ஹரி தமது கொள்கையில் உறுதியாக உள்ளார் எனவும், அவரது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு சாதகமான சூழல் இல்லை என்றால், கண்டிப்பாக முடிசூட்டு விழாவை ஹரி புறக்கணிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
குடும்பத்துடன் இணையவே ஹரி விரும்புவதாகவும், ஆனால் இதுவரை அதற்கான முயற்சிகள் எதுவும் அரண்மனை தரப்பில் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறுகின்றனர்.
சாதாரண உறுப்பினர்கள் போல
மேலும், இளவரசர் ஹரி- மேகன் தம்பதி முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வார்கள் என்றால், குறித்த விழாவுக்கு அழைக்கப்படும் 2,000 விருந்தினர்களில் ஒருபகுதியாகவும், ராஜகுடும்பத்தின் சாதாரண உறுப்பினர்கள் போலவும் நடத்தப்படுவார்கள்.
Credit: Splash
மட்டுமின்றி, விழாவின் ஒருபகுதியாக பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் தோன்றுவதில் இருந்தும் விலக்கப்படுவார்கள். அத்துடன், வேல்ஸ் இளவரசர் வில்லியம்- கேட் தம்பதியை நெருங்கவிடாமல் அதிகாரிகளால் முடக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், முடிசூட்டு விழாவிற்கு வந்தாலும், 24 அல்லது 48 மணி நேரம் மட்டுமே அவர்கள் பிரித்தானியாவில் காணப்படுவார்கள் எனவும் கூறுகின்றனர்.
இதனிடையே, ஹரி மட்டும் விழாவில் கலந்துகொள்ளலாம் எனவும் மேகன் தமது பிள்ளைகளுடன் அமெரிக்காவில் தங்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும், ஹரி- மேகன் தம்பதி முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என சார்லச் மன்னர் விரும்புவதாகவே தெரிவிக்கின்றனர்.