ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் உருகுவதால் பயங்கர விளைவுகள்
Consequences of melting glaciers in the Alps: ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் உருகுவதால் மோசமான விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே, ஆல்ப்ஸ் மலையில் போதுமான பனி இல்லாததால் பல ரிசார்ட்கள் சுற்றுலாப்பயணிகள் இல்லாமல் நஷ்டத்தை எதிர்கொண்டுவருகின்றன.
மலையில் பனி உருகுவதால் ஏற்படும் பிளவுகள், மலையேற்றத்துக்குச் செல்வோருக்கு அபாயத்தை ஏற்படுத்திவருகின்றன.
இந்நிலையில், உருகும் பனிப்பாறைகளால் சுவிஸ் கிராமம் ஒன்றிற்கு எதிர்பாராத அபாயம் ஒன்று உருவாகியுள்ளது.
சுவிஸ் கிராமம் ஒன்றிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
2025ஆம் ஆண்டு மே மாதம், மலையிலிருந்து உருண்டுவந்த பாறைகளும் பனியும் Blatten என்னும் சுவிஸ் கிராமம் ஒன்றை கிட்டத்தட்ட மூழ்கடித்த சம்பவம் நினைவிருக்கலாம்.
அந்த சம்பவம் நிகழ்வதற்கு 10 நாட்கள் முன்பே அக்கிராம மக்களை அதிகாரிகள் வெளியேற்றியிருந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது Kandersteg என்னும் கிராமத்தை ஒட்டி அமைந்திருக்கும் மலையிலுள்ள பனி உருகிவருவதால், அங்கு பெரும் நிலச்சரிவு ஒன்று ஏற்படும் அபாயம் உருவாகிவருகிறது.
அதாவது, மலைகளிலுள்ள பாறைகள், மண், பனி இவை அனைத்துமே, தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பூஜ்யம் டிகிரி செல்ஷியஸுக்கு கீழே இருக்கும்போது, அனைத்துமே இணைந்து உறைந்து பாறைபோல் மாறிவிடும். இது Permafrost என அழைக்கப்படுகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை உயரும்போது, பாறைகளுக்கிடையிலுள்ள பனி உருக, பாறைகள் நெகிழ, மண்ணும் பாறைகளும் கீழ் நோக்கி சரியத் துவங்குகின்றன. இப்படிப்பட்ட ஒரு அபாயம்தான் Kandersteg கிராமத்துக்கு உருவாகியுள்ளது.
உடனடியாக அக்கிராமத்துக்கு அபாயம் இல்லை என்பதால், கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படவில்லை.
என்றாலும், ஜிபிஎஸ் முதலான கருவிகள் மூலம் அந்த பகுதியை அதிகாரிகள் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆபத்து ஏற்படலாம் என கருதப்படும் நிலையில், அக்கிராம மக்கள் 48 மணி நேரத்துக்கு முன் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |