பிரான்சில் நள்ளிரவில் தொலைபேசி விற்பனைக்கு சென்ற சிறுவன்: கத்திக்குத்தில் முடிந்த சம்பவம்
பிரான்சின் Melun நகரில் தொலைபேசி விற்பனைய்யில் ஈடுபட்ட இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Melun நகரில் நேற்று நள்ளிரவு இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 வயது சிறுவன் ஒருவன் இணையத்தளமூடாக தொலைபேசி ஒன்றை விற்பனைக்கு விட்டிருந்தான்.
இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு வாடிக்கையாளர் ஒருவரை சந்திக்க குறித்த சிறுவனும், அவனது உறவினர் ஒருவரும் சென்றிருந்தனர். Melun ரயில் நிலையத்துக்கு முன்பாக இந்த சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதே வேளை தொலைபேசியை வாங்குவதற்காக அங்கு ஒருசிலர் காத்திருந்துள்ளனர். இதனிடையே, சிறுவனுக்கும் வாடிக்கையாளருக்கும் தொலைபேசி விற்பனை தொடர்பில் பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெறவில்லை.
இந்த நிலையில் குறித்த குழு சிறுவனையும், அவனுடன் சென்ற உறவினர் ஒருவரையும் பலமாக தாக்கி கத்தியாலும் குத்தியுள்ளனர்.
பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் Seine-et-Marne மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.