அகதிகள் குறித்து ஜேர்மன் சேன்ஸலர் தெரிவித்த கருத்து: கடும் சர்ச்சை
சிரியா நாட்டு அகதிகள் குறித்து ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்த கருத்து தொடர்பில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
அகதிகள் குறித்து ஜேர்மன் சேன்ஸலர் கருத்து
சிரியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியான அஹ்மத் அல் ஷரா ஜேர்மனிக்கு அரசு முறைப்பயணமாக வந்திருந்த நிலையில், திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடையே பேசினார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.

அப்போது அவர், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜேர்மனியில் வாழும் சிரியா நாட்டு அகதிகளில் 80 சதவிகிதம் பேர் சிரியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தான் நம்புவதாக தெரிவித்திருந்தார்.
மெர்ஸ் கருத்து தொடர்பில் கடும் சர்ச்சை
விடயம் என்னவென்றால், ஜேர்மனியில் 900,000க்கும் அதிகமான சிரியா நாட்டவர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.
அப்படியானால், மெர்ஸ் கூற்றுப்படி அவர்களில் 80 சதவிகிதம் பேர் வெளியேற்றப்படுவார்களா, அது சாத்தியமா என ஊடகவியலாளர்கள் மண்டையைப் பிய்த்துக்கொள்ளத் துவங்கினார்கள்.

அத்துடன் அந்த விடயம் முடியவில்லை! எதிர்க்கட்சியினர் மெர்ஸ் மீது கடும் விமர்சனங்களை முன்வைக்கத் துவங்கியுள்ளார்கள்.
எதிர்க்கட்சியான கிரீன்ஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Luise Amtsberg என்பவர், மெர்ஸின் கூற்று யதார்த்தத்துக்கு பொருந்தாதது மட்டுமல்ல, வஞ்சகமானதும் கூட என்று குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்ல, ஆளுங்கட்சியிலிருந்தும் மெர்ஸின் கருத்துக்கள் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. CDU கட்சியைச் சேர்ந்த Roderich Kiesewetter, சிரியா நாட்டவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஜேர்மனியில் மருத்துவர்களாகவும் செவிலியர்களாகவும் பணியாற்றிவருகிறார்கள்.
அவர்கள் எல்லாம் சிரியாவுக்குத் திரும்பிவிட்டால், நம் மருத்துவத்துறைக்கு சிக்கல்தான் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், மெர்ஸின் கூற்று, ஜேர்மனியில் வாழும் சிரியா நாட்டவர்களையும் கொந்தளிக்கச் செய்துள்ளது.
ஒரு அடிப்படை கணக்கு போட்டால் கூட, மெர்ஸின் கூற்றுப்படி நாளொன்றிற்கு 730 சிரியா நாட்டவர்களை சிரியாவுக்கு நாடு கடத்தினால்தான் மூன்று ஆண்டுகளுக்குள் 80 சதவிகித சிரியா நாட்டவர்களைத் திருப்பி அனுப்பமுடியும் என்கிறார், ஜேர்மனியில் வாழும் சிரியா நாட்டவரான Nahla Osman என்னும் புலம்பெயர்தல் சட்டத்தில் நிபுணரான சட்டத்தரணி.
ஆக, இது சுத்த அரசியல், AfD கட்சி வளர்ந்துவருவதால், அதற்கு எதிராக எதையாவது செய்யவேண்டும் என்னும் நோக்கில் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு அரசியல் சமிக்ஞை இது என்கிறார் அவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |