நெருங்கும் தேர்தல்கள்: வாக்காளர்களுக்கு ஜேர்மன் சேன்ஸலரின் கோரிக்கை
ஜேர்மன் மாகாணங்கள் சிலவற்றில் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சி ஒன்று, ஒரு மாகாணத் தேர்தலில் பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அது குறித்து ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
ஜேர்மன் மாகாண தேர்தல்கள்
ஜேர்மனியின், Saxony-Anhalt, Mecklenburg-Western Pomerania மற்றும் Berlin மாகாணங்களில் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

Saxony-Anhalt மாகாணத்தைப் பொருத்தவரை, புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி, 40 சதவிகித வாக்குகள் வரை பெற்று வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் குறித்துத்தான் ஊடகவியலாளர்கள் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸிடம் கேள்வி எழுப்பினார்கள்.
முதலில் AfD கட்சி குறித்த கேள்வியை தவிர்க்க முயன்ற மெர்ஸ், பின்னர் அதிரடியாக அக்கட்சி வாக்காளர்களுக்கே ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.

AfD கட்சி வாக்காளர்களுக்கும் நான் ஒரு விடயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கவனித்துப் பாருங்கள், நாங்கள் இந்த நாட்டின் சுதந்திரத்தையும், அமைதியையும் பாதுகாக்க பாடுபடுகிறோம், இந்த நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் நாங்கள் பாடுபடுகிறோம்.
ஆகவே, சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை மட்டுமே நம்பி வாக்களிக்காதீர்கள், அதையும் தாண்டி, ஃபெடரல் அரசு என்ன செய்ய முயற்சிக்கிறது என்பதை பார்த்து முடிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளார் மெர்ஸ்.
AfD கட்சி Saxony-Anhalt மாகாணத் தேர்தலில் வெற்றி பெறுமானால், 1933ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிர வலதுசாரிக் கட்சி ஒன்றால் ஆளப்படும் முதல் மாகாணம் என்ற நிலை அந்த மாகாணத்துக்கு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |