என் பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பமாட்டேன்: பிரபல தலைவர் பகிரங்க அறிவிப்பு
அமெரிக்கா இன்னமும் பலருக்கு கனவு தேசம்தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. எனக்கும் அப்படித்தான் என்று கூறியுள்ள உலகத் தலைவர் ஒருவர், ஆனால், இப்போதைய சூழல் அதற்கு மாறாக உள்ளது என்கிறார்.
என் பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பமாட்டேன்
என் பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பமாட்டேன் என்று கூறும் அந்த உலகத் தலைவர் வேறு யாரும் இல்லை, அவர் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்தான்!

பிரெட்ரிக் மெர்ஸ் ஜேர்மனியின் சேன்ஸலரானதைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் சுமூகமான போக்கைக் கடைப்பிடிக்க தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டார்.
ஆனால், அந்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. சொல்லப்போனால், நாளுக்கு நாள் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது எனலாம்.
அதுவும் ஈரான் போர் தொடர்பில், ஈரான் அமெரிக்கர்களை அவமதிப்பதாக மெர்ஸ் கூறியதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த ட்ரம்ப் ஜேர்மனியில் முகாமிட்டிருந்த அமெரிக்கப் படைகளின் ஒரு பகுதியை திரும்பப் பெற்றுக்கொள்ள, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமான நிலையை எட்டியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், மாநாடு ஒன்றில் இளைஞர்களிடையே உரையாற்றிய ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், தான் அமெரிக்காவின் தீவிர ரசிகன் என்றும், ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவை வாய்ப்புகளில் தேசமாக இப்போது பார்க்க இயலவில்லை என்று கூறியுள்ள மெர்ஸ், ’கல்வி கற்பதற்காகவோ, வேலை செய்வதற்காகவோ என் பிள்ளைகளை அமெரிக்கா செல்ல பரிந்துரைக்கமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.
இன்றைய சூழலில், அமெரிக்காவில் சிறந்த கல்வி பெற்றவர்களுக்குக் கூட வேலை கிடைப்பது கடினமாக உள்ளது என்று கூறியுள்ள மெர்ஸ், ஜேர்மானியர்கள் தங்கள் தாய்நாட்டிலேயே வேலை செய்வது குறித்து நேர்மறையான கருத்துக்களைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மெர்ஸின் கருத்துக்கள் ட்ரம்ப் வட்டாரத்திலும், ஜேர்மனியில் ட்ரம்பை ஆதரிக்கும் வலதுசாரிக் கட்சியினரிடையேயும் கடும் கோபத்தை உருவாக்கியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |