பெரும்பாலான சிரியா அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள்: ஜேர்மன் சேன்ஸலர்
ஜேர்மனியில் வாழும் சிரியா நாட்டு அகதிகளில் பெரும்பாலானவர்கள் மூன்று ஆண்டுகளில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என ஜேர்மன் சேன்ஸலர் தெரிவித்துள்ளார்.
சிரியா அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள்
சிரியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியான அஹ்மத் அல் ஷரா ஜேர்மனிக்கு அரசு முறைப்பயணமாக வந்துள்ள நிலையில், அவரும் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸும் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடையே பேசினார் சேன்ஸலர் மெர்ஸ்.

அப்போது அவர், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜேர்மனியில் வாழும் சிரியா நாட்டு அகதிகளில் 80 சதவிகிதம் பேர் சிரியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தானும் அல் ஷராவும் நம்புவதாக தெரிவித்தார்.
சிரியாவில் நடந்த உள்நாட்டு யுத்தத்தைத் தொடர்ந்து, உயிர் தப்ப ஓடி வந்த லட்சக்கணக்கான அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்றார் அப்போதைய ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல்.
ஆனால், அதற்கு ஜேர்மனியில் கடும் எதிர்ப்பு உருவானது. அதிலிருந்து ஐரோப்பா முழுவதும் அதிகரிக்கத் துவங்கிய வலதுசாரிக் கட்சிகள், புலம்பெயர்தலுக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்துவருகின்றன.
ஜேர்மனியில் தீவிர வலதுசாரிக் கட்சியான AfD கட்சி, புலம்பெயர்தலுக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தில் இறங்க, அதற்கு மக்களின் ஒரு பிரிவினரிடையே ஆதரவு அதிகரிக்க, ஆளும் கட்சியினருக்கு அச்சம் உருவானது.
அதைத் தொடர்ந்து, மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக, அதாவது, மக்கள் AfD கட்சிக்கு அளித்துவரும் ஆதரவிலிருந்து அவர்களை மீண்டும் தங்கள் பக்கம் திருப்புவதற்காக, புலம்பெயர்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன, மெர்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணிக் கட்சிகள்.
அவ்வகையில், எல்லையிலேயே புகலிடக்கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புவது முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் மெர்ஸ், தற்போது சிரியாவிலிருந்து வந்த அகதிகளை அவர்கள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்புவதில் தீவிரம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |