பிரித்தானிய மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி அணிவகுப்பின்போது நடந்த குளறுபடி: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
பிரித்தானிய மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி அணிவகுப்பில் நிகழ்ந்த பாதுகாப்பு மீறல் ஒன்றின் காரணமாக, சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நடந்தது என்னவென்றால், பக்கிங்காம் அரண்மனையை நோக்கி வீரர்கள் அணிவகுத்துச் செல்லும்போது, திடீரென போராட்டக்காரர்கள் மூன்று பேர், பொலிசார் அமைத்திருந்த தடுப்பைத் தாண்டி, வீரர்கள் அணிவகுத்து வரும் பாதையில் குறுக்கே புகுந்து தரையில் படுத்துக்கொண்டனர்.
அவர்களில் ஒருவர் தலையில் கிரீடம் ஒன்றை அணிந்திருந்தார். ஒருவர் கையில் வைத்திருந்த அட்டையில், ராஜ நிலத்தை விடுவியுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
உடனடியாக பொலிசார் ஓடிச் சென்று அந்த மூவரையும் குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு நடைபாதையின் ஓரத்துக்கு கொண்டு சென்றார்கள். அவர்களுக்கு கைவிலங்கிடப்பட்டது.
சம்பந்தப்பட்டவர்கள் Animal Rebellion என்னும் விலங்குகள் மற்றும் பருவநிலை ஆதரவு சமூக ஆர்வலர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், ராஜ குடும்பத்தினர் வன உயிர்களை கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டுபவர்கள் ஆவர்.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த அமைப்பைச் சேர்ந்த மேலும் பலர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.