இலங்கை தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள செய்தி
இலங்கையர்கள் ஒரு அமைதியான, நிலையான நாட்டில் வாழும் தகுதி பெற்றவர்கள் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் முடிந்ததன் 13ஆவது ஆண்டு நினைவு நாளைக் குறிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, அந்தப் போரால் ஏற்பட்ட வேதனை, அதிர்ச்சி மற்றும் இழப்புடன் தொடர்ந்து வாழும் குடும்பங்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டில் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளால் தொடர்ந்து மக்கள் அவதியுறுவது கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை இலங்கை அரசு உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ள ட்ரூடோ, வன்முறையைக் கையில் எடுக்கவேண்டாம் என அனைத்துக் கட்சிகளையும் தாங்கள் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் உட்பட இலங்கை மக்கள் அனைவரும் பாதுகாப்பான, அமைதியான மற்றும் நிலையான ஒரு நாட்டில் வாழும் தகுதி பெற்றவர்கள் என்றார் அவர்.
கனேடியர்கள், தமிழர்களான தமிழர்களான தங்கள் அயலகத்தாருக்கும், இலங்கைப் போரால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் தங்கள் ஆதரவை நல்கவேண்டும் என்று கேட்டுகொண்டுள்ள ட்ரூடோ, கடந்த கால துயரங்களைக் குறித்து அறிந்துகொள்தல் முதலான விடயங்கள் மூலம், அவை மீண்டும் நடக்காமல் இருப்பதையும், அனைவருக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதையும் உறுதி செய்ய, அனைவரும் இணைந்து செயலாற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.