24 மணி நேரத்திற்குள்... H-1B விசாதாரர்களை எச்சரித்த முதன்மை நிறுவனங்கள்
ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையை அடுத்து H-1B விசாதாரர்கள் எவரும் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முதன்மையான நிறுவனங்கள் பல கேட்டுக்கொண்டுள்ளன.
நாடு திரும்ப வேண்டும்
குறைந்தபட்சம் 14 நாட்களுக்கேனும் அமெரிக்காவில் இருந்து வெளியேறாமல் இருக்க வலியுறுத்தியுள்ளனர். மட்டுமின்றி, அமெரிக்காவிற்கு வெளியே தங்கியிருக்கும் H-1B விசாதாரர்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாடு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தாமதித்தால், மீண்டும் அமெரிக்காவில் நுழைய முடியாமல் போகலாம் என்றும் எச்சரித்துள்ளனர். மெட்டா நிறுவனம் தனது H-1B விசா மற்றும் H4 அந்தஸ்து வைத்திருப்பவர்கள் குறைந்தது இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவிற்கு வெளியே வசிப்பவர்களுக்கு 24 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கண்டிப்புடன் கூறியுள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களையும் உடனடியாக அமெரிக்கா திரும்ப வலியுறுத்தியுள்ளது.
வேலைவாய்ப்புகள்
முன்னதாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள புதிய ஆணையில், H-1B விசா விண்ணப்பக் கட்டணமாக ஆண்டுக்கு 100,000 அமெரிக்க டொலர் வசூலிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
இதனூடாக குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களை நியமிப்பதன் மூலம் அமெரிக்க வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கப்படும்.
இதனால் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் H-1B விசாதாரர்களைப் பெறும் நிறுவனங்கள், ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |