'கடவுளிடம் வேண்டிக்கொள்' மெஸ்ஸிக்கு மிரட்டல் விடுத்த குத்துச்சண்டை வீரர்!
FIFA உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற பிறகு மெக்சிகோ ஜெர்சியை அவமரியாதை செய்ததற்காக லியோனல் மெஸ்ஸிக்கு உலக சாம்பியன் குத்துச்சண்டை வீரர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
மெக்சிகோவை வென்ற பிறகு அர்ஜென்டினாவின் கொண்டாட்டத்தின் போது லியோனல் மெஸ்ஸி மெக்சிகோ அணியின் ஜெர்சியை காலுக்கு அடியில் போட்டு அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) லுசைல் மைதானத்தில் நடைபெற்ற மெக்சிகோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
Michael Rosenthal/Getty Images
முந்தைய போட்டியில் சவுதி அரேபியா அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், இந்த வெற்றியை அர்ஜெண்டினா வீரர்கள் ஓய்வறையில் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். அணியை ஊக்குவிக்கும் பாடலுக்கு பல வீரர்கள் சட்டையை கழட்டிவிட்டு கொண்டாட்டமாக நடனமாடினார்கள்.
அவர்களின் டிரஸ்ஸிங் ரூம் கொண்டாட்டத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
அந்த வீடியோவில் மெஸ்ஸி மகிழ்ச்சியுடன் கத்துவதைக் காணலாம். அதே காட்சியில் மெக்ஸிகோவின் ஜெர்சி என்று நம்பப்படும் பச்சை நிற ஜெர்ஸி மெஸ்ஸியின் காலடியில் கிடப்பதைக் காண முடிந்தது.
இது, மெஸ்ஸி மெக்சிகோ ஜெர்சியை அவமரியாதை செய்கிறார் என்று மெக்சிகோ ஆதரவாளர்களிடையே கோபத்தை தூண்டியது.
இது மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த உலக குத்துச்சண்டை சாம்பியன் கனெலோ அல்வாரெஸ் (Canelo Alvarez) அவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், அவர் மெஸ்ஸிக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
கனெலோ அல்வாரெஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மெஸ்ஸி நம்ம சட்டையும் கொடியும் கொண்டு தரையை சுத்தம் செய்வதை பார்த்தீர்களா???" என ஸ்பானிஷ் மொழியில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவரது பின்வரும் ட்வீட்களில், "நான் அவனை (மெஸ்ஸி) பார்த்துவிடக்கூடாது என்று அவன் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது நல்லது. நான் அர்ஜென்டினாவை மதிக்கிறேன், நீங்கள் மெக்சிகோவை மதிக்க வேண்டும்!! நான் நாட்டைப் பற்றி பேசவில்லை. நான் மெஸ்ஸியைப் பற்றி பேசுகிறேன்" என்று கூறியுள்ளார். அந்த ட்வீட் தற்போது வைரலாகியுள்ளது.