குழந்தை இயேசு சிலைக்கு கால்பந்து அணியின் உடை! இணையத்தில் வைரலாகும் ரசிகர்களின் செயல்
மெக்ஸிகோவில் கால்பந்து ரசிகர்கள் குழந்தை இயேசு சிலைக்கு தங்கள் அணியின் சீருடையை அணிவித்து பிரார்த்தனை செய்த விடயம் வைரலாகியுள்ளது.
வித்தியாசமான வேண்டுதல்
உலகக்கிண்ணம் கால்பந்து தொடர் கட்டார் நாட்டில் தொடங்கி நடந்து வருகிறது. பிஃபாவின் ஐந்து கூட்டமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் இதில் விளையாடி வருகின்றன. உலகமெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், தங்கள் அணி வெற்றி பெற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மெக்ஸிகோ நாட்டில் உள்ள தேவாலயங்களில் குழந்தை இயேசு சிலைக்கு, கால்பந்து ரசிகர்கள் தங்களது அணியின் சீருடையை அணிவித்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
50 ஆண்டுகால வழக்கம்
சுமார் 50 ஆண்டுகளாக மெக்ஸிகோ நாட்டின் ரசிகர்கள் தங்கள் அணி வெற்றி பெற, கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
1970ஆம் ஆண்டு மெக்ஸிகோ அணி கால் இறுதிக்கு முன்னேறியது முதல், அந்நாட்டு ரசிகர்கள் குழந்தை இயேசுவை வழிபடுவதை இன்று வரை தொடர்ந்து வருகின்றனர்.