மதுரோ நிலை வரலாம்... ட்ரம்பிற்கு பயந்து கியூபாவிற்கு எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தவிருக்கும் நாடு
கியூபாவிற்கு எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுத்தால், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பால் வெனிசுலாவின் நிலை வரலாம் என்பதால் மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் தீவிர ஆலோசனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெக்சிகோவே மிகப்பெரிய
கரீபியன் தீவு நாடான கியூபாவிற்கு ஒரு முக்கிய உயிர்நாடியாக உள்ளது மெக்சிகோவின் எண்ணெய் ஏற்றுமதி. டிசம்பர் மாதம் வெனிசுலாவிற்குள் புகுந்து ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ட்ரம்ப் இராணுவம் கைது செய்துள்ள நிலையில், ட்ரம்பின் அழுத்தம் காரணமாக கியூபாவிற்கான எண்ணெய் ஏற்றுமதியை வெனிசுலா முடக்கியுள்ளது.

இதனால் மின் பற்றாக்குறை மற்றும் பெரும் மின்தடைகளால் அவதிப்படும் அந்தத் தீவு நாட்டுக்கு மெக்சிகோவே மிகப்பெரிய ஒற்றை விநியோகஸ்தராக உள்ளது.
ஆனால், கியூபா வீழ்ச்சிக்குத் தயாராகி உள்ளது.இனி அந்த நாட்டிற்கு பணம் அல்லது எண்ணெய் என எதுவும் அனுப்பப்படாது என ஜனவரி 11 ஆம் திகதி ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், கியூபாவிற்கு நாங்கள் ஆதரவளிப்போம் என மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் வெளிப்படையாக அறிவித்தார். மட்டுமின்றி, அவை நீண்ட கால ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும், சர்வதேச உதவியாகக் கருதப்படுகின்றன என்றும் அவர் விளக்கமளித்தார்.
ஆனால், இந்த ஏற்றுமதிகள் ட்ரம்பை விரோதப்படுத்தக்கூடும் என்ற கவலை ஷெயின்பாமின் அமைச்சரவைக்குள் அதிகரித்து வருவதால், இந்தக் கொள்கை உள் மதிப்பாய்வில் இருப்பதாக மெக்சிகோ அரசாங்கத்தின் மூத்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மெக்சிகோ அரசாங்கம் இறுதியாக என்ன முடிவை எடுக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முழுமையாக நிறுத்துவது, குறைப்பது மற்றும் முழுமையாகத் தொடர்வது ஆகிய அனைத்து வாய்ப்புகளும் இன்னும் பரிசீலனையில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் தடைகளும்
அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டாத வரையில் நெருக்கடி தொடரும் என்றே கியூபா நிர்வாகத்திற்கு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். சமீப வாரங்களில், ட்ரம்ப் மெக்சிகோ மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளார்.

அந்த நாடு போதைப்பொருள் குழுக்களால் ஆளப்படுகிறது என்றும், அவர்களுக்கு எதிராகத் தரைவழித் தாக்குதல்கள் விரைவில் நடத்தப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், மெக்சிகோ பிரதேசத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு ஒருதலைப்பட்ச இராணுவ நடவடிக்கையும், அந்த நாட்டின் இறையாண்மைக்கு ஒரு கடுமையான மீறலாக இருக்கும் என்று ஜனாதிபதி ஷெயின்பாம் தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், வெனிசுலாவின் மதுரோ நிலை வரலாம் என்ற அச்சமும் ஷெயின்பாம் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. கரீபியன் கடலில் உள்ள மிகப்பெரிய தீவான கியூபா, மின்சார உற்பத்தி, பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றுக்கான தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய, சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இறக்குமதியை பெருமளவில் சார்ந்துள்ளது.

அமெரிக்காவின் தடைகளும் கடுமையான பொருளாதார நெருக்கடியும், பல ஆண்டுகளாக கியூபா அரசாங்கத்தால் போதுமான எரிபொருளைக் கொள்முதல் செய்ய முடியாமல் தடுத்துள்ளன.
இது அந்த அரசாங்கத்தை வெனிசுலா மற்றும் மெக்சிகோ போன்ற சிறிய நட்பு நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், மெக்சிகோ கியூபாவிற்கு ஒரு நாளைக்கு 17,200 பீப்பாய்கள் கச்சா எண்ணெயையும், 2,000 பீப்பாய்கள் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களையும் அனுப்பியது, இதன் மதிப்பு தோராயமாக 400 மில்லியன் டொலராகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |