எம்.ஜி.ஆரிடம் மாத சம்பளம் பெற்று அவருக்கே முதலாளியாகும் அளவுக்கு உயர்ந்தவர்! யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கடியான நேரங்களில் தோள் கொடுத்து உதவிய ராஜ விசுவாசிகளில் ஒருவர் ஆர்.எம்.வீரப்பன் என்று பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் கூறியிருக்கிறார்.
யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்?
நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமியின் நாடகக் குழுவில் ஆர்.எம்.வீரப்பன் பணியாற்றி வந்தார். பின்னர், 1953 -ம் ஆண்டு அண்ணாவின் ஆலோசனைப்படி எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் நிர்வாகியாக பொறுப்பேற்றார். இவரின் பணியும், திட்டமிடுதலும் எம்.ஜி.ஆருக்கு பிடித்து விட்டது.
இவர், எம்.ஜி.ஆர். முதன்முதலாக தயாரித்து, நடித்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்துக்கு நிர்வாகியாக பணியாற்றினார். இந்த படத்திற்கு எம்.ஜி.ஆர் தாராளமாக செலவு செய்தார். படத்தினுடைய தயாரிப்பு செலவும் அதிகமானது.
இந்த படம் அரச கதை என்பதால் பிரம்மாண்டமான காட்சிகள் இருக்கும். இதில் ஒரு கயிறு பாலம் வரும். அதற்காக 4 லொறிகள் முழுவதும் கயிறுகள் வேண்டும் என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார்.
ஆனால், அப்போது படத்தின் செலவை கவனித்து வந்த அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி, படத்தின் செலவை பார்த்து வெறுத்து விட்டார்.
இதனால், ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் கடன் கேட்க வீரப்பன் முடிவு செய்தார். இதற்கும் ஒரு சிக்கல் வந்தது. அதாவது, கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டால் தான் கடன் தர முடியும் என்று ஏவிஎம் நிறுவனத்தில் ஆடிட்டராக இருந்த சீனிவாசன் சொல்லி விட்டார்.
ஆனால், படம் வெற்றி பெறாவிட்டால் எம்.ஜி.ஆருக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக வீரப்பன் இதற்கு சம்மதிக்கவில்லை. அதற்கு பதிலாக எம்.ஜி.ஆர் கையெழுத்திட்டிருந்த இலங்கை ஏரியா விநியோக உரிமையை காட்டினார். ஆனால், அதற்கு சீனிவாசன் சம்மதிக்கவில்லை.
இப்படியே நாட்கள் கடந்த நிலையில் எம்.ஜி.ஆரின் அனுமதி பெற்று எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தை ‘Private Limited’ நிறுவனமாக மாற்றி அதன் பங்குதாரராக இருந்த வீரப்பன் நிர்வாக இயக்குநரும் ஆனார்.
பின்னர் ஆடிட்டர் சீனிவாசனிடம் சென்று பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது பிரைவேட் லிமிடெட் ஆக மாறிவிட்டது. அதன்நிர்வாக இயக்குநரும் நான்தான். இதனால், நான் கையெழுத்திட்டால் போதும் என்று கூறினார். இதனை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத நிலையிலும் வீரப்பனின் முயற்சிக்காக கடனை வழங்கினர்.
அதேபோல, நாடோடி மன்னன் திரைப்படமும் பிரம்மாண்ட வெற்றி பெற்று வசூலைக் குவித்தது. அதன்மூலம் வாங்கிய கடனை திரும்ப கொடுத்து மெய்யப்ப செட்டியாரின் அன்பையும் வீரப்பன் பெற்றார்.
1984-ம் ஆண்டு மக்களவைக்கும் தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்ற நேரத்தில், அமெரிக்க மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு எம்ஜிஆர் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று சந்தேகம் வந்தது.
அந்த நேரத்தில் தமிழக செய்தித்துறை அமைச்சராக இருந்த வீரப்பன், மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் தொப்பி இல்லாமல் நாளிதழ்களை படிப்பது, சூப் குடிப்பது போன்ற காட்சிகளை வீடியோ எடுத்து திரையரங்குகளில் வெளியிடச் செய்து மக்களின் சந்தேகத்தை போக்கினார்.
இதனால், அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிபட்டி தொகுதியில் எம்.ஜி.ஆர் வெற்றிபெற்றார். இதனால், எம்.ஜி.ஆர் மூன்றாவது முறையாக முதலமைச்சரானார்.
தொழிலாளியாக இருந்து முதலாளியாக மாறிய வீரப்பன்
எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக இருந்த வீரப்பனுக்கு எம்.ஜி.ஆர் மாத சம்பளம் கொடுத்து வந்தார். இதன்பின்னர், எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் ‘சத்யா மூவிஸ்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் வீரப்பன் தொடங்கினார்.
இந்த நிறுவனம் மூலம் எம்.ஜி.ஆரை வைத்து தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், இதயக்கனி உள்ளிட்ட 6 படங்களை கொடுத்து வெற்றி திரைப்படமாக்கினார். இந்த படங்களில் நடித்த எம்.ஜி.ஆருக்கே வீரப்பன் சம்பளம் வழங்கினார்.
சில நேரத்தில் என்னங்க முதலாளி? என்ன விசேஷம்? என்று வீரப்பனிடம் எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக கேட்பதும் உண்டு.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |