MLC T20 தொடர் - 2வது முறையாக கோப்பையை வென்ற MI நியூயார்க்
MLC T20 தொடரரில், MI நியூயார்க் அணி 2வது முறையாக கோப்பையை வென்றது.
MLC T20 தொடர்
அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட்(MLC) T20 தொடர் கடந்த ஜூன் 12 ஆம் திகதி தொடங்கி ஜூலை 13 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான வாஷிங்டன் ஃப்ரீடம் அணியும், முன்னாள் சாம்பியனான MI நியூயார்க் அணியும் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.
ரச்சின் அரைசதம்
முதலில் துடுப்பாட்டம் ஆடிய MI நியூயார்க் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக குயின்டன் டி காக் 77 ஓட்டங்கள் எடுத்தார். வாஷிங்டன் அணி தரப்பில் லாக்கி பெர்குசன் 3 விக்கெட்கள் எடுத்து அசத்தினார்.
தொடர்ந்து, 181 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் அணி, முதல் ஓவரின் முதல் பந்திலேயே மிட்சேல் ஓவெனும், 5வது பந்தில் ஆண்ட்ரீஸ் கோஸும் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
இக்கட்டான நிலையில், ரச்சின் ரவீந்திராவும்(70), ஜாக் எட்வர்ட்சும்(33) நிதானமாக ஆடி ஓட்டங்களை குவித்தனர்.
கோப்பை வென்ற MI Newyork
கடைசி ஓவரில், வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், மேக்ஸ்வெல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் களத்தில் இருந்தனர்.
இறுதி ஓவரை வீசிய ருஷில் உகர்கர், மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்தியதோடு 6 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதன் மூலம், MI நியூயார்க் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம், MI நியூயார்க் அணி 2வது முறையாக MLC கோப்பையை கைப்பற்றியது. முன்னதாக 2023 ஆம் ஆண்டு MI நியூயார்க் அணியும், 2024 ஆம் ஆண்டு வாஷிங்டன் ஃப்ரீடம் அணியும் கோப்பை வென்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |