ராகுல் சாஹர், டி காக் அபாரம்... மாஸ் காட்டிய ரோஹித்: ஐதராபாத்தை புரட்டிப்போட்ட மும்பை
டி காக் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோரின் அபார ஆட்டத்தால் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 9-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி துடுப்பட்டம் செய்ய முடிவு செய்தது.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் அணித் தலைவர் ரோகித் சர்மா களமிறங்கினர். ரோகித் சர்மா 32 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ஓட்டங்களில் வெளியேறினார்.
குவிண்டன் டிகாக் 40 ஓட்டங்களில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் பொல்லார்ட் 3 சிக்சர், 1 பவுண்டரியுடன் 35 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ஓட்டங்கள் எடுத்தது. ஐதராபாத் சார்பில் முஜீப், விஜயசங்கர் தலா 2 விக்கெட், கலீல் அகமது 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 151 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியின் டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 67 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் 43 ஓட்டங்களில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய மணீஷ் பாண்டே(2), வார்னர்(36), விராட் சிங்(11) ஓட்டங்களிலும் அவுட்டாகினர். கடைசி 5 ஓவர்களில் அணித் தலைவராக ரோகித் சர்மா தனது அனுபவத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார்.
கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரில் 2 விக்கெட் வீழ்ந்தது. 6 ஓட்டங்கள் மடடுமே கிடைத்தது. 19வது ஓவரில் 5 ஓட்டங்கள் கிடைத்தது.
அதிரடியாக ஆடிய விஜயசங்கர் 28 ஓட்டங்களில் அவுட்டானார். இறுதியில், ஐதராபாத் அணி 137 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் மும்பை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது.
மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.