அமெரிக்காவில் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதல்: 2 பயணிகள் காயம்
Miami Airport Plane Collision Injures Two Passengers: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் 2 விமானங்கள் ஓடுபாதையில் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பயணிகள் லேசான காயங்களுடன் மருத்துவ உதவி பெற்றுள்ளனர். இந்த சம்பவம், அமெரிக்கா முழுவதும் ஏற்பட்ட விமான சேவை முடக்கத்தால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட மறுநாளே நடந்துள்ளது.

விமான நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பனாமா நகரில் இருந்து வந்த கோப்பா ஏர்லைன்ஸ் (Copa Airlines) நிறுவனத்தின் போயிங் 737 விமானத்தில் 166 பயணிகளும் 6 பணியாளர்களும் இருந்தனர்.
அந்த விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது, UPS நிறுவனத்தின் போயிங் 767 சரக்கு விமானத்தின் முன்பகுதியுடன் அதன் சிறகின் முனை மோதியது. இந்த விபத்து இரவு சுமார் 9.15 மணியளவில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையார் ஆனந்த பவன் உணவகத்தில் 180 மில்லியன் டொலர் முதலீடு - பெரும்பான்மை பங்குகளை வாங்கும் பில்லியனர்
விபத்துக்குப் பிறகு அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். காயமடைந்த இரண்டு பேருக்கு விமான நிலைய மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். மற்ற பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் நலமாக இருப்பதாக கோப்பா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவம் குறித்து நடைபெறும் விசாரணையில் அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்போம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இதற்கிடையில், சமூக வலைதளங்களில் வெளியான விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் ஆடியோவில், “யாரோ எங்களை மோதிவிட்டார்கள்” என்று கோப்பா விமானத்தின் விமானி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு UPS விமானி, “நாங்கள் கொஞ்சம் அதிகமாக முன்னேறிவிட்டோம்; பின்னர் அவர்களின் விமான சிறகு எங்களைத் தொட்டது” என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. விமானத்தில் பயணித்த ஒருவர், திடீரென ஒரு அதிர்ச்சியான மோதல் உணரப்பட்டதாகவும், சிலர் பதற்றமடைந்தபோதும் விமான ஊழியர்கள் உடனடியாக நிலைமையை கட்டுப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களில் மியாமி விமான நிலையத்தில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய சம்பவம் இதுவாகும். மேலும், சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட தகவல் தொடர்பு கோளாறு காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பது விமானப் பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |