பிளாஸ்டிக்கையே ஜீரணிக்கும் நுண்ணுயிர்கள்: சுவிட்சர்லாந்தில் ஒரு அரிய கண்டுபிடிப்பு
பொதுவாக, நுண்ணுயிர்கள் என்றாலே, அவை பாக்டீரியாவாக இருந்தாலும் சரி, பூஞ்சைகளாக இருந்தாலும் சரி, அவற்றால் ஏற்படும் தீமை குறித்தே பெருமளவில் செய்திகள் வெளியாவதுண்டு.
ஆனால், மனிதன் ஏற்படுத்தும் மாசுவுக்கு எதிராக நன்மை செய்யும் சில நுண்ணுயிர்கள் குறித்த சுவாரஸ்யம் மிக்க தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிளாஸ்டிக்கையே ஜீரணிக்கும் நுண்ணுயிர்கள்
ஆம், சுவிட்சர்லாந்திலுள்ள Graubünden பகுதியில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலையிலும், ஆர்டிக் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில நுண்ணுயிர்கள், PUR (polyurethane) மற்றும் PBAT/PLA வகை பிளாஸ்டிக்குகளை ஜீரணிக்கும் தன்மை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
PUR என்பது வீட்டில் பயன்படுத்தும் ஸ்பாஞ்ச், மெத்தைகள் அல்லது ஷூக்களில் காணப்படும். PBAT/PLA என்பது மட்கும் வகை பிளாஸ்டிக் பைகளில் காணப்படும் பொருளாகும்.
அரிய கண்டுபிடிப்பு
ஒரு பக்கம் மக்கள் பூமியை பிளாஸ்டிக் பொருட்களால் மாசுபடுத்துக்கொண்டிருக்க, மறுபக்கம் அந்த மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கை மட்கச் செய்வதற்கான ஆய்வுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதாவது பிளாஸ்டிக்கை ஜீரணிக்கும் நுண்ணுயிர்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆனால், அவற்றைப் பயன்படுத்தி பிளாஸ்டிக்கை ஜீரணிக்கும் நடைமுறைகள் மிகவும் செலவு பிடிக்கக்கூடியவை. அத்துடன், சற்று உயர் வெப்ப நிலையில்தான் இந்த ஜீரணித்தல் நடைபெற்றுவருகிறது.
அதே நேரத்தில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நுண்ணுயிர்கள், குறைந்த வெப்பநிலையிலேயே சிலவகை பிளாஸ்டிக்குகளை ஜீரணிக்கக்கூடியவை என்பதுதான் முக்கிய கண்டுபிடிப்பாகும். குறிப்பாக Neodevriesia மற்றும் Lachnellula என்னும் இரண்டு பூஞ்சைகள், ஆய்வக சோதனைகளில் நல்ல விளைவுகளைக் கொடுத்துள்ளன.
இனி இந்த பூஞ்சைகள் அல்லது அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் என்சைம்கள், எந்தெந்த வெப்ப நிலைகளில், எந்த அளவுக்கு பிளாஸ்டிக்கை ஜீரணிக்கும் என்பது குறித்த ஆய்வுகள் சுவிஸ் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.