மூன்றாவது தடுப்பூசி போட்ட 10 வாரங்களிலே இது நடக்கிறது! எச்சரிக்கும் சுகாதார அதிகாரிகள்
கொரோனாவில் இருந்து முற்றிலும் தப்பிக்க வேண்டும் என்றால் மூன்றாவது தடுப்பூசி அவசியம் என்று வலியுறுத்தப்படும் நிலையில், மூன்றாவது தடுப்பூசி போட்ட 10 வாரங்களிலே பாதுகாப்பு குறைவது தெரியவந்துள்ளது.
உலகை தற்போது அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸால் மூன்றாவது தடுப்பூசி, அதாவது பூஸ்டர் ஜாப் மிகவும் முக்கியம், மக்கள் அதை நிச்சயமாக போட்டுக் கொள்ள வேண்டும் என்று உலகில் இருக்கும் பல்வேறு மருத்துவர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஒமைக்ரான் வைரஸ், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் தாக்குவதாக நம்பப்படுகிறது. ஏனெனில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 9.5 சதவீதம் பேர் இதற்கு முன் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பூஸ்டர் ஜாப்(மூன்றாவது தடுப்பூசி) போட்ட 10 வாரங்களுக்கு பிறகு, ஒமைக்ரானுக்கு எதிரான பாதுகாப்பு குறைவதாக பிரித்தானியாவின் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
UK Health Security Agency (UKHSA) நடத்திய ஆய்வில், புதிய ஒமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை, தற்போது 70 சதவீதம் குறைவாகவே உள்ளது தெரியவந்துள்ளது.
இருப்பினும், இந்த ஒமைக்ரான் வைரஸ் முந்தைய டெல்டா போன்ற கொரோனா வைரஸ்களை விட புதிய விகாரம் கொண்ட, அதிகம் பரவக் கூடியதாக உள்ளதாகவும், வரும் வாரங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தற்போது, Health Savings Account (HSA) வெளியிட்டுள்ள தகவலில், ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி குறைவான பாதுகாப்பை அளிக்கும் என நம்பப்படுவதாக தெரிவித்துள்ளது.
முதல் இரண்டு தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, பூஸ்டர் தடுப்பூசி கொரோனாவிற்கு(ஒமைக்ரான்) எதிராக அதிக பாதுகாப்பை வழங்குகிறது என்று பகுப்பாய்வு காட்டுகிறது.
ஆனால், மூன்றாவது தடுப்பூசி போட்ட 10 வாரங்களுக்குப் பிறகு, கொரோனா அறிகுறி நோயைத் தடுப்பதில் 15 முதல் 25 சதவீதம் குறைவதாக HSA நம்புகிறது.
இப்போது பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் சிலர், கடந்த எட்டு முதல் 10 வாரங்களுக்கு முன்பு தங்கள் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
இதனால் அவர்கள் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், நோய் எதிர்க்கும் தன்மை குறைந்துள்ளதோ என்று HSA நம்புவதாக பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
பூஸ்டர் ஜாப் போட்ட 10 வாரங்களுக்குப் பிறகு நோய்க்கு எதிரான பாதுகாப்பு குறையத் துவங்குவது தெரியவந்துள்ளதால், மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், மிகவும் கவனமுடனும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றும் படியும் எச்சரிக்கப்படுகிறது.