ஒரு திடுக் தொலைபேசி அழைப்பு... இன்று புலம்பெயர்தல் தொடர்பில் அதிரடி முடிவுகளை எடுக்கும் பிரீத்தி பட்டேல்
பிரித்தானிய உள்துறைச் செயலருக்கு வந்த ஒரு திடுக்கிட வைக்கும் தொலைபேசி அழைப்பு, புலம்பெயர்தல் தொடர்பில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க அவரைத் தூண்டியுள்ளது.
பிரபல ஊடகமான Daily Mailக்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை அளித்த பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேல், ஞாயிற்றுக்கிழமை மாலை தனக்கு எல்லை பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.
அந்த தொலைபேசி அழைப்பில் வட பிரான்சில் கடத்தல்காரர்கள் ஒரு குடும்பத்தை துப்பாக்கி முனையில் மிரட்டி படகில் ஏற்றி பிரித்தானியாவுக்கு அனுப்பியது குறித்த ஒரு திடுக்கிடவைக்கும் ஒரு தகவலை அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
ஒரு தாய், தந்தை, இரண்டு பெண் பிள்ளைகள் ஆகியோரை பிரித்தானியாவுக்கு அனுப்புவதாக அழைத்துவந்த கடத்தல்காரர்கள், அந்த தாயையும் தந்தையையும் ஒரு படகில் ஏற்றியுள்ளார்கள். இளம்பெண்களான தங்கள் இரண்டு மகள்களையும் தங்களுடன் அனுப்புமாறு அந்த பெற்றோர் கடத்தல்காரர்களிடம் கெஞ்ச, துப்பாக்கி முனையில் அவர்களை மிரட்டி படகில் ஏற்றிய அந்த கடத்தல்காரர்கள், அவர்களது மகள்களை அடுத்த படகில் அனுப்பிவிடுவதாக கூறியிருக்கிறார்கள்.
கடத்தல்காரர்களிடம் சிக்கியுள்ள இளம்பெண்களான தங்கள் மகள்களின் நிலைமை என்ன ஆகுமோ என தெரியாமல் அஞ்சி நடுங்கியபடி அந்த பெற்றோர் பிரித்தானியா நோக்கிய் பயணித்துள்ளனர்.
அதற்குப் பிறகு அவர்கள் அந்த பெண் பிள்ளைகளை பார்க்கவேயில்லை. ஏற்கனவே சட்ட விரோத புலம்பெய்ர்ந்தோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பிரீத்தி பட்டேலை இந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைக்க, மீண்டும் கடுமையான பல நடவடிக்கைளில் இறங்கியுள்ளார் அவர்.
அதன்படி, மாஸ்டர் பிளான் ஒன்றை வகுத்துள்ள பிரீத்தி பட்டேல், புலம்பெயர்வோர் வரும் படகுகளை திருப்பி அனுப்பும் அதிகாரத்தை எல்லை பாதுகாப்புப் படைக்கு வழங்க இருக்கிறார்.
சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு வரும் புலம்பெயர்வோரின் புகலிட உரிமைகளை குலைக்கவும், கடத்தல்காரர்களை குறிவைக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
இன்று அறிமுகம் செய்யப்படும் மசோதா ஒன்றின்படி, படகுகளை பறிமுதல் செய்யவும், தேவைப்பட்டால் படகுகளிலிருந்து புலம்பெயர்வோரை வலுக்கட்டாயமாக இறக்கிவிடவும் எல்லை பாதுகாப்பு படைக்கு அதிகாரம் அளிக்கப்பட உள்ளது.
(கிட்டத்தட்ட, அவுஸ்திரேலியாவில் படகுகள் வாயிலாக வரும் புலம்பெயர்வோருக்கு எதிராக எடுக்கப்படுவது போன்ற ஒரு நடவடிக்கை இது எனலாம்). பிரித்தானியாவின் புகலிடக்கோரிக்கை அமைப்பு தேவையின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்று கூறியுள்ள பிரீத்தி பட்டேல், கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்க இயலும் திறனின் அடிப்படையில் இருக்கக்கூடாது என்கிறார்.
மக்கள் கடத்தல் கூட்டங்களின் கையில் அவதியுறும் நிலையில், நாம் செயல்பட்டாகவேண்டும், அதுவும் உடனடியாக செயல்பட்டாகவேண்டும் என்கிறார் அவர். அனுமதியின்றி பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நான்கு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள்.
சட்டவிரோத புலம்பெயர்வோரின் சலுகைகள் குறைக்கப்படும். அகதி நிலை கோர அவர்களுக்கு ஏற்கத்தக்க காரணம் இருந்தாலும், அவர்கள் பிரித்தானியாவில் 30 மாதங்கள் வரை தற்காலிகமாக தங்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
சலுகைகள் கோர அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதோடு, அவர்கள் தங்கள் உறவினர்களை பிரித்தானியாவுக்கு கொண்டு வரவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
அதே நேரத்தில், பிரித்தானியாவுக்கு சட்டப்படி வர முன்கூட்டியே முறைப்படி விண்ணப்பிப்போர், அவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், உடனடியாக பிரித்தானியாவுக்கு வர அனுமதிக்கப்படுவதுடன், காலவரையறையின்றி தங்கவும் அனுமதிக்கப்படுவார்கள்.
முறையான காரணங்களின்றி புலம்பெயர்வோருக்கு உதவ முற்படும் சட்டத்தரணிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.