கனடா எல்லையில் உயிரிழந்த இந்தியர்களை நினைவிருக்கிறதா?: தற்போது அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்
கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக பலியான சம்பவம் நினைவிருக்கலாம்.
அத்துடன், அவர்களுடன் கூட கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நடந்தே நுழைய முயன்ற சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களை அமெரிக்காவுக்குள் அனுப்ப முயன்றதாக கடத்தல்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இப்படி உயிரிழப்புகள் நிகழ்ந்தாலும், அபாயகரமான முறையில் கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
மனித உயிர்களைப்பற்றி சற்றும் கவலையில்லாத மனிதக் கடத்தல்காரர்கள், பணத்துக்காக இப்படி மக்களை கடத்துகிறார்கள் என்று கூறும் அதிகாரிகள், அவர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை, ஆகவே, அவர்களுக்கு வேறு எதைக் குறித்தும் கவலையில்லை என்கிறார்கள்.