கர்ப்பிணித்தாய் தந்தையுடன் பயணிக்கும்போது தண்ணீரில் விழுந்து உயிரிழந்த புலம்பெயர் சிறுமி இவர்தான்
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் ஆசையில் சிறு படகொன்றில் தன் கர்ப்பிணித்தாய், தந்தையுடன் பயணிக்கும்போது ஆங்கிலக்கால்வாயில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவுக்குள் நுழையும் ஆசையில்...
ஈராக் நாட்டவர்களான முகம்மது, அவரது கர்ப்பிணி மனைவியான நூர், பிள்ளகள் முஹைமன் (14), ஹஸன் (10), மோவாமெல் (8) மற்றும் ரூலா (7) ஆகியோர், ஈராக்கிலிருந்து உயிர் பயம் காரணமாக ஜேர்மனிக்கு தப்பி வந்து, அங்கிருந்து பிரான்சை வந்தடைந்துள்ளார்கள்.
பிரித்தானியாவுக்குச் சென்றால் பாதுகாப்பாக வாழலாம் என்ற நம்பிக்கையில், மனிதக்கடத்தல்காரர்களுக்கு 6,000 யூரோக்கள் கொடுத்துள்ளது அந்தக் குடும்பம்.
சுற்றுலாப்பயணிகள் பயணிக்கும் படகில் பாதுகாப்பாக குடும்பத்துடன் பிரித்தானியாவுக்குச் செல்லலாம் என்று மனிதக் கடத்தல்காரர்கள் சொன்னதை நம்பி, பிரெஞ்சுக் கடற்கரை ஒன்றிற்கு குடும்பத்துடன் வந்தவர்களுக்காக காத்திருந்தது, திருடப்பட்ட ஒரு ரப்பர் படகு.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே படகுக்குள் தண்ணீர் புக, படகு கவிழ, முகம்மது, தண்ணீரில் தத்தளித்த தன் மனைவி, ஒரு மகன் மற்றும் யாரோ ஒரு ஆண் என மூன்று பேரைக் காப்பாற்றியிருக்கிறார்.
ஆனால், அவரது மகள் ரூலாவை யாரும் காப்பாற்றவில்லை! ஏழு வயது ரூலா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகிவிட்டாள்.
விடை தெரியா எதிர்காலம்
தற்போது ரூலா மற்றும் அவளது குடும்பத்தினரின் புகைப்படங்களும், அவர்கள் பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றும் வெளியாகியுள்ளது.
முகம்மதுவும், கர்ப்பிணியான அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் உயிரிழந்த ரூலாவின் உடலுடன் பிரான்சுக்கே திரும்பிய நிலையில், பிரான்சிலுள்ள Lille என்னுமிடத்திலுள்ள இறுதிச்சடங்கு மையம் ஒன்றில் ரூலாவின் உடலை புதைக்க இடம் கிடைத்துள்ளது.
முகம்மது குடும்பம் அங்கு செல்ல, முன்பின் தெரியாத ஒரு கூட்டம் தன் மகளுடைய இறுதிச்சடங்குக்காக அங்கு கூடியதைக் கண்ட முகம்மது நெகிழ்ந்து கண்ணீர் வடிக்கிறார்.
அங்கு மகளை நல்லடக்கம் செய்துவிட்டுத் திரும்பும் முகம்மதுவிடம், மீண்டும் பிரித்தானியாவுக்கு செல்ல முயல்வீர்களா என்று கேட்டால், அதைவிட என் குடும்பத்துக்கு வேறு எந்த பாதுகாப்பும் இல்லை என்கிறார் அவர்.
ஆனால் ஒரு சோகமான விடயம் என்னவென்றால், அவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிட்டால், நீண்ட காலத்துக்கு பிரித்தானியாவிலிருந்து வெளியேறமுடியாது.
எதிர்காலத்தில், பிரான்சில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மகளுடைய கல்லறையைக் காணச் செல்வது அவர்களுக்கு அரிதான ஒரு காரியமாகிவிடும் என்பது நிச்சயமாகவே துயரமான ஒரு விடயம்தான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |