தந்தை, கர்ப்பிணித்தாயுடன் ஆங்கிலக்கால்வாயில் விழுந்த புலம்பெயர் சிறுமி: ஒரு துயரச் செய்தி
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், ஆங்கிலக்கால்வாயில் பயணம் மேற்கொண்ட சிறுபடகொன்று விபத்துக்குள்ளான நிலையில், படகில் தன் குடும்பத்தினருடன் பயணித்த புலம்பெயர் சிறுமி ஒருத்தி பரிதாபமாக பலியானாள்.
ஆங்கிலக்கால்வாயில் விழுந்த புலம்பெயர் சிறுமி
நேற்று காலை, பிரான்சிலுள்ள Dunkirk என்னும் பகுதியிலிருந்து, 16 புலம்பெயர்வோருடன் சிறிய ரப்பர் படகொன்று ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியா நோக்கி புறப்பட்டுள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்தில், அந்த படகு கவிழ, படகிலிருந்தோர் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருப்பது குறித்த தகவலறிந்த பிரான்ஸ் பொலிசாரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்கள்.
Pic: Google
தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒரு 7 வயது சிறுமி மட்டும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டாள்.
அவள் தன்னுடைய தந்தை, கர்ப்பிணியான தாய் மற்றும் மூன்று சகோதரிகளுடன் படகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியாகியுள்ளாள்.
சிறுபடகு
விபத்துக்குள்ளான படகு மிகவும் சிறிய படகு என்றும், அது 16 பேர் பயணிக்க உகந்த படகல்ல என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். மேலும், அந்த படகு திருடப்பட்ட படகாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
PA MEDIA
படகில் பயணித்த மற்றொரு தம்பதி, ஆறு சிறுபிள்ளைகள் மற்றும் இரண்டு ஆண்கள் முதலானோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக Dunkirk அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |