ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் நேர்காணல் இல்லாமலே அங்கீகரிப்பு: பிரித்தானியாவின் முடிவும் எதிர்ப்பும்
பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழைந்த ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள், நேர்காணல் இல்லாமலேயே அங்கீகரிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏன் இப்படி ஒரு திடீர் முடிவு?
அதாவது, பரிசீலிக்கப்படவேண்டிய புகலிடக்கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் ஏராளமாக குவிந்துவிட்டனவாம். அவற்றை விரைவாக பரிசீலித்து முடிப்பதற்காகத்தான் இந்த திட்டமாம்.
இந்த ஆண்டுக்குள் 100,000 புகலிடக்கோரிக்கைகளை பரிசீலித்துமுடிக்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உறுதிபூண்டுள்ளாராம்.
இரண்டு கட்டமாக நிறைவேற்றப்பட இருக்கும் இந்த திட்டத்தின்படி, சுமார் 12,000 பேர் பிரித்தானியாவில் வாழ்வதற்காக விண்ணப்பிப்பதற்கு வெறுமனே படிவங்கள் சிலவற்றை நிரப்பினால் போதும்.
அவர்கள் அடிப்படை தீவிரவாத மற்றும் குற்றவியல் பின்னணிச் சோதனைகளில் வெற்றிபெற்றுவிட்டால், சரியான காரணத்தை முன்வைக்கும் நிலையில், அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும்.
குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்திற்கு முன் பிரித்தானியாவுக்கு வந்த ஆப்கானிஸ்தான், எரித்ரியா, சிரியா, ஏமன் மற்றும் லிபியா முதலான நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் இத்திட்டத்தின் மூலம் பலனடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உருவாகியுள்ள எதிர்ப்பு
ஆனால், அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.
அதாவது, இத்திட்டம், சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதுபோலாகிவிடும் என்றும், அது மேலும் பலர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதை ஊக்குவிப்பதாக அமைந்துவிடக்கூடும் என்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.