புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு கவிழ்ந்ததில் மூன்று பேர் பலி: சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
பிரித்தானியாவுக்குள் காலை வைத்தாலே நாடுகடத்திவிடுவோம் என்று இப்போதுதான் சொன்னார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக். அதற்குள் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற புலம்பெயர்ந்தோர் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான புலம்பெயர்ந்தோர் படகு
இன்று அதிகாலை 3.00 மணியளவில், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, டோவர் பகுதியிருந்து 30 மைல் தொலைவில் அமைந்துள்ள Dungeness என்ற பகுதியில், புலம்பெயர்ந்தோர் பயணித்த சிறுபடகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தகவலறிந்து, பிரித்தானிய கடலோரக் காவல்படையினர், பிரான்ஸ் கடற்படையினர் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று ஆகியவை சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.
மூன்று பேர் பலி
இந்த துயர சம்பவத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடுங்கும் குளிரில் தத்தளித்துக்கொண்டிருந்த 43 பேர் தண்ணீரிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்கள்.
உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், எதனால் படகு கவிழ்ந்தது என்பது போன்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
Credit: PA