சாவதே மேல்... ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படும் திட்டம் குறித்த அச்சத்தில் புலம்பெயர்வோர்
நாட்டில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருந்தாலும், புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் விடயம் தன்மானப்பிரச்சினையாகவும், பதவிக்கு உலைவைக்கும் விடயமாகவும் ஆகிவிட்டதால், எப்படியாவது ருவாண்டா திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என ஒற்றைக்காலில் நிற்கிறார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
ஆனால், அந்த திட்டம், உயிர் பயம் உட்பட பல்வேறு காரணங்களுக்காக பிரித்தானியாவுக்கு உயிரைப் பணயம் வைத்து வந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும், ஒரு நல்ல வாழ்வு கிடைக்கும் என்ற ஆசையில் பிரித்தானியாவுக்கு புலம்பெயரும் ஆசையிலிருப்போருக்கும் எவ்வளவு பயத்தை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும், புலம்பெயர் பின்னணி கொண்ட ரிஷி அதை நிறைவேற்ற அடம்பிடிக்கிறார்.
PHOTO: REUTERS
பிரான்சில் காத்திருக்கும் ஒரு கூட்டம்
மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள், சட்டத்துறை என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும், ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என ருவாண்டாவில் வாழ்பவர்களே கூறியபின்னரும், கொஞ்சமும் அசராமல், புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தியே தீருவது என அடம்பிடித்துவருகிறார் ரிஷி.
இந்நிலையில், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய ஒரு கூட்டம் தயாராக பிரான்சில் காத்திருக்கிறது. வடக்கு பிரான்சிலுள்ள Dunkirk நகரில் முகாமிட்டுள்ள ஒரு கூட்டம் புலம்பெயர்வோர், தாங்கள் பிரித்தானியாவில் கால்வைத்ததும், பிரித்தானிய அதிகாரிகள் தங்களைப் பிடித்து ருவாண்டாவுக்கு நாடுகடத்திவிடக்கூடும் என்பது தங்களுக்குத் தெரியும் என்கிறார்கள் அவர்கள்.
சாவதே மேல்...
பிரித்தானியாவுக்குள் எப்படியாவது நுழைந்துவிடவேண்டும் என்னும் எண்ணத்தில் வந்திருக்கும் ஈராக்கிய குர்திஷ் இனத்தவரான Sagvan Khalid Ibrahim என்பவர், என் நாட்டுக்கும் ருவண்டாவுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என்கிறார்.
நான் சுதந்திரமாக வாழலாம் என்னும் ஆசையில் என் நாட்டிலிருந்து தப்பி வந்திருக்கிறேன், என்னை ருவாண்டாவுக்கு அனுப்பப் போகிறார்களா? ருவாண்டாவுக்கு போவதைவிட, ஐரோப்பாவில் சாவதையே நான் விரும்புகிறேன் என்கிறார் அவர்.
PHOTO: REUTERS
Ebrahim Hamit Hassou என்னும் இளைஞரோ, ருவாண்டாவுக்கு அனுப்பப்படும் அபாயம் இருந்தால் நான் இங்கிலாந்துக்குச் செல்லப்போவதில்லை என்கிறார். ருவாண்டா பாதுகாப்பான நாடா இல்லையா என்பது யாருக்குத் தெரியும் என்கிறார் அவர்.
அப்படி நாங்கள் ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுவோம் என்றால், என்னிடம் plan B உள்ளது என்கிறார் Hamid என்னும் ஆப்கன் நாட்டவர். ஆம், நான் அயர்லாந்துக்குப் போய்விடுவேன் என்கிறார் அவர்.
ஆக மொத்தத்தில், இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் ரிஷியும் அவரது உள்துறைச் செய்லரான ஜேம்ஸ் கிளெவர்லியும். ஆம், பிரித்தானியாவுக்கு புலம்பெயரவேண்டுமென்ற எண்ணத்தில் இருப்பவர்கள், அங்கு சென்றால், தங்களைப் பிடித்து ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவிடுவார்கள் என்ற பயத்தை உருவாக்கத்தானே அவர்கள் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |