குழந்தைகள் உட்பட புலம்பெயர்வோர் 23 பேரை எல்லையில் தடுத்து நிறுத்திய ஜேர்மன் பொலிசார்
ஈராக்கைச் சேர்ந்த புலம்பெயர்வோர் 23 பேரை போலந்துக்கும் ஜேர்மனிக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில் பொலிசார் தடுத்து நிறுத்தினார்கள்.
அவர்களில் குழந்தைகளும் அடக்கம்...
அவர்களைக் கைது செய்த ஜேர்மன் பொலிசார், அவர்களில் சிரியாவைச் சேர்ந்த இருவர் மக்கள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் என தெரிவித்துள்ளார்கள்.
நடந்தது என்னவென்றால், எல்லைப்பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்றை பொலிசார் நிறுத்தி சோதனையிட்டிருக்கிறார்கள். அப்போது அதில் 23 புலம்பெயர்வோர் இருப்பது தெரியவந்துள்ளது.
பெலாரஸ் நாட்டிலிருந்து போலந்து மற்றும் ஜேர்மன் எல்லை வழியாக ஜேர்மனிக்குள் நுழைய முயல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதைத் தொடர்ந்து அங்கு வாகனச் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில்தான், ஜேர்மன் உள்துறை அமைச்சரான Horst Seehofer, பெலாரஸிலிருந்து புலம்பெயர்வோர் ஏராளமானோர் வரத்தொடங்கியுள்ளதால் ஜேர்மன் போலந்து எல்லையைப் பாதுகாக்க நூற்றுக்கணக்கான பொலிசார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதையடுத்து, போலந்து, லிதுவேனியா மற்றும் லாத்வியா ஆகிய நாடுகள், பெலாரசுடனான தங்கள் எல்லைப்பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.