பிரித்தானியாவின் மிதக்கும் சிறையில் பயங்கர நோய்க்கிருமிகள்
எதிர்ப்பையும் மீறி புலம்பெயர்ந்தோரை மிதக்கும் சிறை என அழைக்கப்படும் மிதவைப்படகுகளில் ஏற்றிய பிரித்தானியாவின் உள்துறைச் செயலருக்கு எதிர்பாராத பின்னடைவு நோய்க்கிருமிகள் வடிவில் வந்துள்ளது.
எதிர்ப்பையும் மீறி மிதவைப்படகுகளில் ஏற்றப்பட்ட புலம்பெயர்ந்தோர்
பிரித்தானியாவுக்குள் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் வரை, அவர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதால் அரசுக்கு அதிக செலவு ஏற்படுவதாகக் கூறி, செலவைக் குறைப்பதற்காக, அவர்களை மிதவைப்படகுகளில் தங்கவைப்பது என பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
அப்படி மிதவைப்படகுகளில் மக்களை தங்கவைப்பது பாதுகாப்பானது அல்ல என்று தொண்டு நிறுவனங்களும் எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி, Bibby Stockholm எனப்படும் மிதவைப்படகுகளில் 39 புலம்பெயர்ந்தோர் ஏற்றப்பட்டனர்.
மிதக்கும் சிறையில் பயங்கர நோய்க்கிருமிகள்
ஆனால், அந்த மிதவைப்படகில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் நோய்க்கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உண்மையில், திங்கட்கிழமையன்றே இந்த தகவல் கிடைத்தும் புலம்பெயர்ந்தோர் படகில் ஏற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து தண்ணீர் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில் படகிலுள்ள தண்ணீரில் நோய்க்கிருமிகள் முற்றிலும் அழிக்கப்படும்வரை புலம்பெயர்ந்தோரை படகிலிருந்து வெளியேற்றுவது என முடிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து படகிலிருந்த 39 புலம்பெயர்ந்தோரும் வெளியேற்றப்பட்டு மீண்டும் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
என்ன நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
புலம்பெயர்ந்தோர் ஏற்றப்பட்ட படகிலுள்ள தண்ணீரில் கண்டுபிடிக்கப்பட்ட நோய்க்கிருமியின் பெயர் Legionella ஆகும். இந்த பாக்டீரியா Legionnaires disease என்னும் ஒருவகை நிமோனியா போன்ற நோயை உருவாக்கும்.
நுரையீரலுக்குள் நுழையும் இந்த நோய்க்கிருமி, இருமல், மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சலை உருவாக்கும். பதிக்கப்பட்டவர்களில் சிலர் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
இதற்கிடையில், எதிர்ப்பையும் மீறி, புலம்பெயர்ந்தோரை படகில் ஏற்றிய உள்துறைச் செயலர் ராஜினாமா செய்யவேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்துவதில் முதல் வெற்றிப்படி எடுத்துவைத்துவிட்டோம் என பெருமைப்பட்டுக்கொண்ட அரசுக்கு, படகில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயத்தால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |