அகதிகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கும் பிரித்தானியா
தங்கள் விசா காலம் முடிவடைந்த பிறகும் பிரித்தானியாவில் தங்கும் அகதிகளுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது பிரித்தானியா.
அதன்படி, தங்கள் விசாக்காலம் முடிவடைந்தும் பிரித்தானியாவில் தங்கும் சட்ட விரோத அகதிகள், மருத்துவ வசதிகள் முதலானவற்றை பயன்படுத்த இயலாத ஒரு சூழல் உருவாக்கப்படும் என தெரிகிறது.
நேற்று வெளியிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி, 2025ஆம் ஆண்டு வாக்கில் டிஜிட்டல் விசாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவற்றை அரசு கட்டுப்படுத்தும் என்பதால், அவை காலாவதியானபின், அவற்றை வைத்திருப்பவர்கள் எவ்வித சலுகைகள், சேவைகளையும் பெற முடியாததுடன் வேலை செய்யவும் முடியாத ஒரு நிலை உருவாகும். இத்திட்டம், சட்டவிரோத புலம்பெயர்தலை முழுமையாக கட்டுப்படுத்தும் என அரசு நம்புகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆவணம், எல்லையை டிஜிட்டல் மயமாக்கும் இத்திட்டம் மூலம் கிடைக்கும் துல்லியமான தரவுகள், ஒருவர் குறிப்பிட்ட காலகட்டத்தில், அதாவது அவரது விசாக்காலம் முடிவடைந்த பிறகு, பிரித்தானியாவுக்கு உள்ளே இருக்கிறாரா அல்லது வெளியே இருக்கிறாரா என்பதை தெளிவாகக் காட்டிவிடும் என்கிறது.
அத்துடன், ஒருவர் நாட்டுக்குள் எந்த நிலையிலிருக்கிறார், உதாரணமாக, அகதி நிலையோ, தற்காலிக வாழிட உரிமம் வைத்திருக்கும் நிலையோ, எந்த நிலையிலிருக்கிறார், என்பதைக் குறித்த விவரங்கள் அரசு மற்றும் பிற நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுவிடும்.
அதை வைத்து ஒருவர் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, அவருக்கு பிரித்தானியாவில் வேலை செய்யும் உரிமம் உள்ளதா, அவருக்கு வீடு வாடகைக்கு எடுக்கும் உரிமம் உள்ளதா என்பது போன்ற விவரங்கள் தெரியவந்துவிடும். எல்லாவற்றிற்கும் மேல், ஒருவர் அரசின் மருத்துவ சேவையை அணுகும்போது, அவர் மருத்துவ சேவை பெற தகுதியானவரா என்னும் விவரமும் தெரியவந்துவிடும்.
இந்த திட்டத்தால் எல்லை பாதுகாப்புக்கு செலவு குறைவதோடு, எல்லை பாதுகாப்பு
மேம்படும் என்றும், அடையாள ஆவணங்கள் மோசடி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதும்,
திருடப்பட்டு பயன்படுத்தப்படுவதும் குறையும் என்றும் பிரித்தானிய அரசு
தெரிவித்துள்ளது.