இப்படியாக நுழையும் புலம்பெயர்ந்தோர்... குடியுரிமை மறுக்கப்படும்: பிரித்தானியா உறுதி
சிறிய படகுகளில் அல்லது லொறிகளில் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை மறுக்கப்படும் என்று புதிய உள்விவகார அலுவலக வழிகாட்டுதல் கூறுகிறது.
பிப்ரவரி 10 முதல்
ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு சட்டவிரோதமாக பிரித்தானியா வந்தவர்களுக்கு, அவர்கள் எப்போது வந்தார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், பிப்ரவரி 10 முதல் குடியுரிமை மறுக்கப்படும்.
ஆபத்தான பயணம் என்பது, சிறிய படகுகள் அல்லது வாகனத்தில் ஒளிந்திருந்து நுழைவது அல்லது பிற போக்குவரத்து ஊடாக நுழைபவர்களுக்கு இந்த விதிகள் பொருந்தும் என்றே கூறப்படுகிறது.
ஆனால் வணிக விமான நிறுவனத்தில் பயணிகளாக வருவோருக்கு இது பொருந்தாது என்றே வழிகாட்டுதலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முன்னர், ஆபத்தான பாதைகளை தெரிவு செய்து பிரித்தானியவுக்குள் நுழைந்த அகதிகள் குடியுரிமை பெறுவதற்கு 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஆனால் தற்போது சட்டவிரோதமாக நுழையும் மக்களுக்கு இனி குடியுரிமை மறுக்கப்படும் என்பதை உள்விவகார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. லேபர் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறிய படகுகளில் வரும் மக்கள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளனர்.
திருத்தப்பட வேண்டும்
ஜூலை 4, 2024 முதல் பிப்ரவரி 6, 2025 வரை கிட்டத்தட்ட 25,000 பேர் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர். இந்த நிலையில், சில லேபர் கட்சி எம்.பி.க்களும் அகதிகள் கவுன்சிலும் சமீபத்திய வழிகாட்டுதலைக் கண்டித்துள்ளன.
அதாவது சட்டவிரோதமாக நுழையும் அகதிகள் பிரித்தானியாவில் வாழ அனுமதிக்கப்படுவார்கள் ஆனால் சமூகத்தில் அவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என்பதை புதிய வழிகாட்டுதல் குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வழிகாட்டுதல் உடனடியாக திருத்தப்பட வேண்டும் என லேபர் கட்சி எம்.பி. Stella Creasy தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நாம் ஒருவருக்கு அகதி அந்தஸ்து வழங்கினால், அவர்கள் பிரித்தானிய குடிமகனாக மாறுவதற்கு வழி மறுப்பது சரியானதாக இருக்க முடியாது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |