புலம்பெயர்ந்தோரை நடுக்கடலில் தவிக்கவிட்ட விடயம்: ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரான்ஸ்
நடுக்கடலில் தவித்த புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ளாமல் தவிக்க விட்டதைத் தொடர்ந்து, இத்தாலியுடனான புலம்பெயர்தல் ஒப்பந்தம் ஒன்றை பிரான்ஸ் ரத்து செய்துவிட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சிக்கல்
தொண்டு நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான Ocean Viking ship என்ற கப்பல் நடுக்கடலில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை மீட்ட நிலையில், அந்த கப்பலை தனது துறைமுகத்தில் ஏற்றுக்கொள்ளவும், புலம்பெயர்ந்தோர் இத்தாலி துறைமுகத்தில் இறங்கவும் இத்தாலி அரசு மறுத்துவிட்டது.
அந்தக் கப்பலில் 230 புலம்பெயர்ந்தோர் இருந்தார்கள். குழந்தைகள் மற்றும் பெண்கள் சிலரை மட்டும் இறங்க அனுமதித்த இத்தாலி அரசு, மற்றவர்களை ஏற்றுக்கொள்ளாததால், புலம்பெயர்ந்தோருடன் அந்தக் கப்பல் நடுக்கடலில் நிற்கவேண்டிய நிலை உருவானது. ஆகவே, அந்த கப்பலை தங்கள் துறைமுகத்தில் ஏற்றுக்கொள்ள பிரான்ஸ் முன்வந்தது.
இந்த பிரச்சினை அண்டை நாடுகளான இத்தாலிக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
SOS MEDITERRANEE/REUTERS
புலம்பெயர்தல் ஒப்பந்தம் ரத்து
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அதாவது இத்தாலி புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து, இத்தாலியுடனான புலம்பெயர்ந்தோர் ஒப்பந்தம் ஒன்றை பிரான்ஸ் ரத்து செய்துவிட்டது.
இது குறித்துப் பேசிய பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin, இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
அத்துடன், இத்தாலியில் தற்போது இருக்கும் 3,500 அகதிகளை ஏற்றுக்கொள்வதாக பிரான்ஸ் இத்தாலியுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், இத்தாலியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த ஒப்பந்தத்தின்படி அந்த அகதிகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும், இத்தாலியுடனான எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க பிரான்ஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் Darmanin கூறியுள்ளார்.