பிரித்தானியாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தால்தான் குடியுரிமை: எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
சில நாடுகளில், புலம்பெயர்ந்தோர் குடியுரிமை பெறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன.
பிரித்தானியாவிலும் அதேபோன்ற சில கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவேண்டும் என பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் அரசை வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானியாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தால்தான் குடியுரிமை
பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருமான கெமி பேடனாக் (Kemi Badenoch), பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோர், பிரித்தானியாவில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரவேண்டுமென அரசை வலியுறுத்தியுள்ளார்.
புலம்பெயர்வோர் எக்கச்சக்கமாக வருகிறார்கள், அவர்கள் குடியுரிமை பெறுவது விரைவாக நடந்துவிடுகிறது, ஆகவே, குடியுரிமை வழங்குவதன் வேகத்தைக் குறைக்கவேண்டும் என்கிறார் கெமி.
சுவிட்சர்லாந்து போன்ற சில நாடுகளில், புலம்பெயர்ந்தோர் அரசின் நிதி உதவியைப் பெறக்கூடாது என விதி உள்ளது.
அதைப்போல, பணி விசாவில் வந்து, பிரித்தானியாவில் குடியுரிமை கோருவோருக்கும் அரசின் நிதி உதவியோ அல்லது வீடோ வழங்கக்கூடாது என்றும் கெமி கூறியுள்ளார்.
பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த, அதாவது, இத்தனை பேர்தான் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படவேண்டும் என கட்டுப்பாடு கொண்டுவருவது தொடர்பில் கெமி ஏற்கனவே உறுதி எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |