இனி கொரோனா மரணங்கள் இருக்காது... அவுஸ்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ள மைல்கல் சிகிச்சை
அவுஸ்திரேலிய அறிவியலாளர்கள் 99.9 சதவிகித கொரோனா வைரஸை கொல்லும் அரிய சிகிச்சை முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த சிகிச்சை முறை, இலக்கை தேடிக்கண்டு பிடித்து அழிக்கும் ஒரு ஏவுகணையைப் போல, நுரையீரலில் இருக்கும் கொரோனா வைரஸ்களை தேடிக்கண்டுபிடித்து தாக்குகிறது.
குயின்ஸ்லாந்திலுள்ள Griffith பல்கலைக்கழகத்தில், சர்வதேச அறிவியலாளர்கள் குழு ஒன்று இந்த அடுத்த தலைமுறை சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளது.
ஆய்வின் தலைமையேற்று நடத்துபவர்களில் ஒருவரான பேராசிரியர் Nigel McMillan கூறும்போது, கொரோனா சிகிச்சையில் ஒரு மைல் கல் என கருதப்படும் இந்த சிகிச்சை, வைரஸ் இனப்பெருக்கம் செய்வதைத் தடுத்து, சொல்லப்போனால், உலகம் முழுவதிலும் கொரோனா மரணங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றார்.
இது, இலக்கைத் தேடிக்கண்டுபிடித்து அழிக்கும் ஒரு முறையைப் போன்றது என்று கூறும் அவர், ஒருவருடைய நுரையீரலில் வளரும் வைரஸ்களை இந்த முறையைப் பயன்படுத்தி குறிப்பாக அழிக்க முடியும் என்கிறார்.
இந்த சிகிச்சை, 1990களில் முதன்முதலாக அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட gene-silencing என்ற மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இம்முறையில், கொரோனாவைத் தாக்க RNA என்னும் மரபுப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த RNAவின் சிறு துகள்கள் சென்று கொரோனா வைரஸைக் கட்டிப்போட்டுவிடும்.
அதனால், கொரோனா வைரஸால் இனப்பெருக்கம் முதலான எந்த வேலையும் செய்ய முடியாமல் அப்படியே அது தானாகவே அழிந்துவிடும். மிக நுண்ணிய துகள்களான 'nanoparticle' என்னும் துகள்களைப் பயன்படுத்தி இந்த மருந்தை நோயாளியின் உடலுக்குள், அதாவது இரத்தக்குழாய்களுக்குள் ஊசி மூலம் செலுத்தவேண்டும்.
அப்போது, இந்த மிக நுண்ணிய துகள்களான nanoparticleகள், இரத்தம் வழியாக பயணித்து நோயாளியின் நுரையீரலுக்குள் சென்று, தான் சுமந்து வந்த RNAவின் சிறு துகள்களை அங்கிருக்கும் கொரோனா வைரஸுடன் இணைத்துவிடும்.
அந்த RNAவின் சிறு துகள்கள் கொரோனா வைரஸ்களை செயல்படவிடாமல் தடுத்துவிடும், இதனால், கொரோனா வைரஸ்கள் தானாகவே அழிந்துவிடும். இந்த சிகிச்சை முறை முழுமையாக வெற்றி பெற்று நடைமுறை பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், உலகில் இனி கொரோனா மரணங்கள் இருக்காது என நம்புகிறார்கள் இந்த அறிவியலாளர்கள்.