ட்ரோன் ஊடுருவல்... இராணுவத்திற்கு சிறப்பு அனுமதி அளிக்க ஜேர்மனி திட்டம்
ஜேர்மன் வான்பரப்பில் அத்துமீறி ஊடுருவும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த இராணுவத்திற்கு சிறப்பு அனுமதி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரோன் ஊடுருவல்
சமீபத்திய நாட்களில் ஐரோப்பாவின் பல நாடுகளில் ட்ரோன் ஊடுருவல் புதிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ள நிலையிலேயே ஜேர்மனியின் இந்த முடிவு.
டென்மார்க் மற்றும் நோர்வே விமான நிலையங்களுக்கு மேலே ட்ரோன்கள் ஊடுருவியதை அடுத்து, சில விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டன.
வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் டென்மார்க்கின் மிகப்பெரிய இராணுவத் தளத்தின் மீது ட்ரோன் பறந்ததும் அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில், சமீபத்திய நாட்களில் ஜேர்மனியிலும் மர்மமான முறையில் ட்ரோன்கள் தென்படுவது அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது.
டென்மார்க்கின் எல்லையை ஒட்டிய வடக்கு மாகாணம் ஒன்றில் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ட்ரோன் பறந்தது உறுதி செய்யப்பட்டது. உறுதியான ஆதாரங்கள் இதுவரை சிக்கவில்லை என்றாலும், அது ரஷ்ய ட்ரோன்கள் என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இராணுவம் தலையிட
இதனிடையே, அதிகரித்து வரும் ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இந்த வார தொடக்கத்தில் ஜேர்மனி தனது ட்ரோன் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தும் திட்டங்களை ஏற்கனவே அறிவித்திருந்தது.
திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில், சில நிபந்தனைகளின் கீழ் ஆயுதப்படைகள் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த அனுமதிப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
மேலும், ஒரு ட்ரோன் மனித உயிருக்கு அல்லது முக்கியமான உள்கட்டமைப்புக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்டால் இராணுவம் தலையிட முடியும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், முடிவெடுக்கும் அதிகாரங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. அத்தகைய அதிகாரங்கள் தற்போது காவல்துறையிடம் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |