முதன்முறையாக பிரான்ஸ் விண்வெளியில் இராணுவ பயிற்சி: பின்னணியை விளக்கும் செய்தி
முதன்முறையாக பிரான்ஸ், விண்வெளியில் இராணுவ பயிற்சியை துவக்கியுள்ளது. விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள தனது சேட்டிலைட்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்த இராணுவ பயிற்சியை துவக்கப்பட்டுள்ளது.
முதல் பிரெஞ்சு சேட்டிலைட்டின் நினைவாக இந்த இராணுவ பயிற்சிக்கு AsterX என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இராணுவ பயிற்சியின்போது, தனது சேட்டிலைட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயத்தை பிரான்ஸ் இராணுவம் கண்காணிக்க உள்ளது.
திங்களன்று துவங்கிய இந்த இராணுவ பயிற்சியில், அமெரிக்க மற்றும் ஜேர்மன் விண்வெளி ஏஜன்சிகளும் பங்கேற்கின்றன. இந்த பயிற்சி இந்த வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது.
நமது நண்பர்களும் எதிரிகளும் விண்வெளியை இராணுவமயமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது நாம் செயல்பட்டாகவேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் Florence Parly 2019ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.
2017ஆம் ஆண்டு, ரஷ்ய உளவு சேட்டிலைட் ஒன்று பிரான்ஸ் -இத்தாலிய சேட்டிலைட் ஒன்றை நெருங்க முயன்றது. அதை உளவு பார்க்கும் முயற்சி என பிரான்ஸ் கூறியிருந்தது.
பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளின் இராணுவங்கள் பாதுகாப்பான முறையில் தகவல் தொடர்பு செய்ய பயன்படுத்தும் Athena-Fidus என்னும் சேட்டிலைட்டிலிருந்து வெளியாகும் தகவல்களை இடைமறிக்க, ரஷ்யாவின் Olymp-K என்னும் சேட்டிலைட் அப்போது முயற்சி செய்தது தெரியவந்தது.
பிரான்ஸ் இந்த வாரம் மேற்கொண்டுள்ள இந்த இராணுவ பயிற்சி, உலகின் மூன்றாவது பெரிய விண்வெளி சக்தி கொண்ட நாடாக பிரான்சை ஆக்கும் அரசின் முயற்சியாகும்.